வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 25 நவம்பர் 2015 (13:44 IST)

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த நிபுணர்கள் குழு: நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த நிபுணர்கள் குழு அமைத்து அதற்கான அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


 

 
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படுவதால், தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011 நடைமுறைப்படுத்தப் படுவதாலும், மேற்கண்ட சட்டம் மற்றும் விதிகளை ஆய்வு செய்து, தனியார் பள்ளிகளுக்கான பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுப்பதற்கு ஆலோசனை வழங்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
 
இதன்படி ஒரு நிபுணர்கள் குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இந்த புதிய சட்டத்தையும், விதிகளையும் வகுப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் முன்னாள் துணை வேந்தருமான கு.ஆளுடைய பிள்ளை அவர்களை தலைவராகக் கொண்டு நிபுணர்கள் குழு அமைக்கப்படுகிறது.
 
இந்த குழுவில், சட்டத்துறை செயலர் எஸ்.எஸ்.பூவலிங்கம், பள்ளிக்கல்வித் துறை துணை செயலர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்கல்வி இயக்குனர், மெட்ரிக்குலேஷன் கல்வி இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாமகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில், "தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டம் 1973ன் கீழ் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்கள் செயல்பட வேண்டும்.
 
ஆனால், மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இந்த சட்டத்தின் கீழ் செயல்படாமல், தமிழ்நாடு மெட்ரிக் குலேஷன் விதிகளின் கீழ் செயல்படுகிறது.
 
இந்த விதிகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இந்த விதிகளின் கீழ் பள்ளிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட அங்கீகாரங்களை ரத்து செய்ய வேண்டும்.
 
தனியார் பள்ளிகளை ஒழுங்குப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் புதிய சட்டங்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
 
இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, தனியார் பள்ளிகளை ஒழுங்குப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைந்த புதிய சட்டத்தை இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றும் அந்த சட்ட வரைவுகளை தயாரிக்க உயர்நிலை குழு அமைக்கப்பட உள்ளது என்றும் ஓர் ஆண்டுக்குள் இந்த புதிய சட்டம் சட்டசபையில் தாக்கல் செய்து, அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இதையடுத்து, இந்த புதிய சட்டத்தை ஓர் ஆண்டுக்குள் அமல் படுத்த வரவேண்டும் என்றும் இதற்கான நிபுணர் குழுவை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.