1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 18 டிசம்பர் 2014 (13:31 IST)

தமிழகத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அமைச்சர்களை பிரதமர் பதவி நீக்க வேண்டும் - ராமதாஸ்

ஒரு மாநிலத்திற்கு எதிராகவும், செயல்படும் மத்திய அமைச்சர்களை பிரதமர் பதவி நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
காவிரியில் மேகதாது என்ற இடத்தில் 48 டி.எம்.சி. கொள்ளளவுள்ள புதிய அணை கட்டுவது குறித்த பிரச்சினையில் கர்நாடகத்தின் விருப்பத்தை நிறைவேற்றுவது குறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.
 
அரசியல் சட்டத்திற்கு எதிரான மத்திய அமைச்சர்களின் இத்தகைய செயல்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் கர்நாடக அரசு கடைபிடித்து வரும் பிடிவாதப் போக்கால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் முறையாக கிடைப்பதில்லை.
 
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை முழுமையாக வென்றெடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வருகிறது. 
 
இந்த நிலையில், தமிழகத்திற்கு கிடைக்கும் கசிவு நீரையும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக எல்லையில் உள்ள மேகதாது என்ற இடத்தில் பிரமாண்ட அணை ஒன்றை கட்டும் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ள கர்நாடக அரசு, அதை செயல்படுத்துவதற்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது.

மேகதாது...
இதற்குப் பிறகும் தமிழக அரசு விழித்துக் கொண்டு மத்திய அரசுக்கு அரசியல் ரீதியிலான அழுத்தத்தை கொடுக்க மறுக்கிறது. கர்நாடகத்தை ஆளும் காங்கிரசும், மத்தியில் ஆளும் பாஜகவும் அரசியலில் எதிரெதிர் முனையில் இருக்கும் போதிலும், கர்நாடக மாநில நலனைக் காப்பதற்காக இரு கட்சிகளும் கைகோர்த்து செயல்படுகின்றன. 
 
அதன் ஒருகட்டமாக மேகதாது அணைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தடுப்பது ஆகியவை குறித்து கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும் நேற்றும், நேற்று முன்நாளும் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். 
 
இக்கூட்டத்தின் உண்மையான நோக்கம் தெரிந்தோ, தெரியாமலோ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்தேக்கர், வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். 
 
அரசியலமைப்பு சட்டத்தை மதித்தும், எல்லா மாநிலங்களுக்கும் பொதுவாகவும் செயல்படுவோம் என்று வாக்குறுதி ஏற்ற மத்திய அமைச்சர்களான அனந்த குமாரும், சதானந்த கவுடாவும் தங்களது மாநிலத்திற்கு சாதகமாகவும், தமிழ்நாட்டிற்கு எதிராகவும் செயல்படுவது முறையா? 
 
தமிழக முதலமைச்சர் பதவிக்கான பாரதிய ஜனதா வேட்பாளர் என்று கூறப்படும் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இக்கூட்டத்தில் அறிந்தோ, அறியாமலோ பங்கேற்றது தமிழகத்திற்கு செய்த துரோகம் அல்லவா? 
 
ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறியும், ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு மாநிலத்திற்கு எதிராகவும், செயல்படும் மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா, பிரகாஷ் ஜவ்தேக்கர் ஆகியோரை பிரதமர் பதவி நீக்க வேண்டும்.