1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 21 ஜூன் 2017 (10:05 IST)

அடுத்த ஜனாதிபதி யார்? தீர்மானிக்கும் சக்தியாக உள்ள அதிமுக!

அடுத்த ஜனாதிபதி யார்? தீர்மானிக்கும் சக்தியாக உள்ள அதிமுக!

இந்தியா முழுவதும் உள்ள ஒரே பேச்சு அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி தான். பாஜக தனது ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை அறிவித்துள்ளது. அவரது வெற்றி உறுதியான வெற்றி என சொல்ல முடியாது. சற்று ஊசலாடுகிற நிலையில் தான் உள்ளது.


 
 
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பவர்களில் 48.93 சதவீத வாக்குகளை தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி தன் வசம் தற்போது வைத்துள்ளது. மீதமுள்ள வாக்குகள் எதிர்க்கட்சிகள் பக்கம் மொத்தமாக குவிந்தால் ராம்நாத் கோவிந்த் தோல்வி தான் அடைவார்.
 
ஆனல் அதனை அவ்வளவு எளிதாக விட்டுவிடாது பாஜக. பாஜக ஜனாதிபதி தேர்தலுக்கு தங்கள் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளவர் பீகார் ஆளுநராக உள்ள தலித் சமுதாயத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் என்பவர். பாஜக வாக்கு வங்கி அரசியலை முன் வைத்து தான் தலித் வேட்பாளரை களம் இறக்கியுள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது.
 
வட இந்தியாவில் பாஜகவுக்கு ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகள் ஆதரவு இல்லை. பாஜகவின் குறி இந்த தேர்தலில் தென் இந்திய கட்சிகள் தான். குறிப்பாக பாஜகவின் முதல் இலக்காக இருப்பது தனது கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக தன்.
 
அதிமுகவின் ஆதரவு சிதறாமல் பாஜகவுக்கு கிடைத்து விட்டால் பாஜகவின் வெற்றியை எதிர்க்கட்சிகள் எந்த முயற்சி எடுத்தாலும் தடுக்க முடியாது. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக உள்ள அதிமுக ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட 6 சதவீத வாக்குகளை வைத்துள்ளது. இந்த வாக்குகள் தான் பாஜகவின் வெற்றியை தீர்மானிக்கும் ஒன்றாக உள்ளது.
 
ஆனால் இந்த வாக்குகள் பாஜகவுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதை அவ்வளவு உறுதியாக சொல்ல முடியாது. அதிமுகவின் ஆதரவு பாஜகவுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தாலும் அந்த கட்சியை பாஜக தனது கட்டுப்பாட்டில் தான் வைத்துள்ளது.
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவின் விவகாரங்கள் அனைத்திலும் தலையிட்டு அந்த கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது பாஜக என பகிரங்கமாகவே அரசியல் வட்டாரத்தில் பேசுகிறார்கள். அதற்கு தடையாக இருந்த சசிகலா, தினகரன் ஆகியோரை சிறைக்கு அனுப்பியதிலும் பாஜகவின் பங்கு இருப்பதாகவே கூறப்படுகிறது.
 
இவர்கள் இருவரும் மனது வைத்தால் தான் அதிமுகவின் வாக்கு சிதறாமல் பாஜகவுக்கு செல்லும் என்பது தான் உண்மை. ஆனால் அதிமுகவுக்கு இது தான் பாஜக பிடியில் இருந்து வெளியே வருவதற்கு சரியான தருணம் என்பதை சசிகலா உணராமல் இருப்பதற்கு இல்லை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் அதிமுக எடுக்க இருக்கும் முடிவு தான் அடுத்த இந்திய ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்க உள்ளது.