1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2014 (16:09 IST)

கர்ப்பிணிகள் வயிற்றில் உள்ள குழந்தைகளை கொலை செய்வதில் குஜராத் முதலிடம் - மு.க.ஸ்டாலின்

கர்ப்பிணியாக இருக்கும் தாய்மார்களின் வயிற்றில் உள்ள கருக்களை கொலை செய்வதில் குஜராத் முதலிடம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
 
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் உமாராணியை ஆதரித்து ஸ்டாலின் பேசிய போது, பாரதீய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. அது உள்ளபடியே நல்ல எண்ணத்தோடு உருவான கூட்டணியல்ல. சந்தர்ப்பவாதமாக அமைந்திருக்கக் கூடிய கூட்டணி அது. அதில் இடம் பெற்று இருக்கக் கூடியவர்கள் ஏற்கனவே நம்முடைய கூட்டணியில் இருந்தவர்கள் தான். அதுமட்டுமல்ல நம் கூட்டணியில் நின்று வெற்றி பெற்று மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் தான். அப்படி அமைச்சர்களாக இருந்த போது இந்த தொகுதிக்கும், பகுதிக்கும் ஏதாவது நன்மை செய்து உள்ளார்களா என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
 
அந்த கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் ஒரு வேட்பாளர் இங்கே போட்டியிடுகிறார். அவரை பற்றி பேசி என்னுடைய தரத்தை நான் குறைத்து கொள்ள விரும்பவில்லை. அந்த கட்சியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் பாமக பற்றி என்னவெல்லாம் பேசி இருக்கிறார் ? பேட்டிகள் அளித்து, அறிக்கைகள் வெளியிட்டு இருக்கிறார் என்பது நிச்சயம் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு தெரிந்திருக்கும், அவற்றையெல்லாம் அவர்கள் மறந்து இருக்கவும் முடியாது.
 
ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன், குரங்கு மரத்தை விட்டு மரம் தாவுவது போல ராமதாஸ் தேர்தலுக்கு தேர்தல் வேறு வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறார் என்றவர் விஜயகாந்த். அத்துடன்  நிறுத்தவில்லை, ராமதாஸ் எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறார் என்று கேட்டவர் தான் நடிகர் விஜயகாந்த். ராமதாஸ் அவர்களுடன் நமக்கு வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவரை ஜெயலலிதா அரசு கைது செய்த போது, அதனை கண்டித்து முதன் முதலில் குரல் கொடுத்தவர் நம்முடைய தலைவர் கருணாநிதி. அதனை ராமதாசும் சரி, அவருடைய கட்சி தொண்டர்களும் சரி மறந்திருக்க மாட்டார்கள். ஆக அப்படி ஒரு கூட்டணி.

இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடிய பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி இன்றைக்கு சேலத்துக்கு வந்திருக்கிறார். அவர் பேசுகிறபோது அதிமுக ஆட்சியை பற்றி பேசியிருந்தால் பரவாயில்லை. ஆனால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த கோட்டைமேடு கூட்டத்தின் மூலம் அவரை நான் கேட்க விரும்புவது, இன்றைக்கு குஜராத் மாநிலத்தின் நிலைமை என்ன ? என்னுடைய கேள்விக்கு அவராவது, இல்லை அந்த கட்சியை சேர்ந்தவர்கள் யாராவது பதில் அளிக்க வேண்டும்.
 
இன்றைக்கு நாட்டிலேயே கல்வியில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் கேரளா. ஆனால் குஜராத் கல்வியில் பெற்றுள்ள இடம் 28வது இடம். குஜராத் நாட்டிலே முதல் மாநிலமாக உள்ளது என்று மோடி சொல்கிறார் ஆனால் தேசிய திட்ட கமிசன்  தகவலில் எதிலும் முதல் மாநிலமாக இல்லை.
 
பிறகு எதில் தான் குஜராத் மாநிலம் முதலிடத்தில் உள்ளது என்றால், கர்ப்பிணியாக இருக்கும் தாய்மார்களின் வயிற்றில் உள்ள கருக்களை கொலை செய்வதில் குஜராத் முதலிடம், குழந்தைகள் ஊட்டசத்து குறைபாடுகளில் முதலிடம், சிறுபான்மையின மக்களை அடக்குவதில் முதலிடம் பெற்றுள்ளது.
 
அதுமட்டுமல்ல 5000 த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்துள்ளார்கள். அதில் இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. சிறு தொழில் நிறுவனங்கள் எல்லாம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதில் மோடி ஆளும் குஜராத் முதலிடம் என்பதை நான் இங்கு ஆதாரத்துடன் குறிப்பிட விரும்புகிறேன்.
 
அதேபோல மின் உற்பத்தி பற்றி இங்கு வந்து பேசிவிட்டு போயிருக்கும் மோடி ஆட்சி செய்யும் குஜராத்தில் 11 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பே கிடையாது. ஆனால் கருணாநிதி, 1970ல் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தமிழ்நாட்டில் கிராமந்தோறும் மின் இணைப்பு தந்த முன்னோடி மாநிலமாக இருந்த மாநிலம் தமிழகம்.
 
அதுமட்டுமல்ல குஜராத்தில் உள்ள 1 கோடி 20 லட்சம் வீடுகளில் 63 லட்சம் வீடுகளில் கேஸ் இணைப்பே இல்லை. ஆனால் 2006 - 11 ஆட்சிகாலத்தில் இலவச அடுப்புடன் கூடிய கேஸ் இணைப்புகளை வழங்கியது திமுக ஆட்சி.
 
அப்படிப்பட்ட இவர்கள் நம்மை பார்த்து விமர்சனம் செய்கிறார்கள் என்று சொன்னால், பல முன்னோடி திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சி திமுக ஆட்சி என்பதை அவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று ஸ்டாலின் பேசினார்.