வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2014 (12:17 IST)

கர்ப்பிணிப் பெண்ணுக்குக் காதலனுடன் திருமணம் செய்து வைத்த நீதிபதி

காதலித்தப் பெண்ணுடன் வாலிபருக்கு, விழுப்புரம் மாவட்ட நீதிபதி திருமணம் நடத்தி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் மகன் 21 வயதுடைய பாஸ்கர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சத்யா என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் திருமண ஆசை காட்டி சத்யாவை பாஸ்கர் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சத்யா கர்ப்பமானார். இதைத் தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பாஸ்கரிடம் சத்யா கேட்டுள்ளார்.

இதற்கு பாஸ்கர் மறுத்துள்ளார். இது குறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சத்யா புகார் அளித்தார். அதன் பேரில் பாஸ்கர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து கள்ளக்குறிச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ண மூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மாற்றுமுறை தீர்வு மையத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். தொடர்ந்து பாஸ்கர், சத்யாவை அழைத்துப் பேசியதை அடுத்து இருவரும் திருமணத்திற்குச் சம்மதித்தனர். இதற்கு உறவினர்களும் ஒப்புக் கொண்டனர்.

அதன்படி விழுப்புரம் நீதிமன்றம் அருகில் உள்ள தேரடி பிள்ளையார் வீதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் மாவட்ட முதன்மை நீதிபதி கிருஷ்ணமூர்த்தி முன்னி லையில் திருமணம் நடந்தது.

இந்தத் திருமணத்தில், நீதிமன்ற ஊழியர்கள், காவல்துறையினர், இரு வீட்டு குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.