வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 25 டிசம்பர் 2014 (09:21 IST)

பொள்ளாச்சியில் 2 சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி காப்பகத்தில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு வேலை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. என்ற கிறிஸ்தவ நிறுவனத்துக்குச் சொந்தமான காப்பகம் செயல்பட்டு வந்தது.
 
இந்த காப்பகத்துக்குள் வால்பாறையைச் சேர்ந்த 23 வயதுடைய கட்டிட தொழிலாளியான வீராச்சாமி என்பவர் கடந்த 11-6-2014 அன்று அங்கு தங்கி இருந்த 11 மற்றும் 8 வயதான 2 சிறுமிகளை அந்த காப்பகத்தின் அருகே உள்ள மாடிக்கு கடத்திச் சென்று அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிச் சென்றார்.
 
இது குறித்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் அத்துமீறி நுழைதல், கடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வீராச்சாமியை கடந்த 15-6-2014 அன்று கைது செய்தனர். 
 
இதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கை விரைவாக முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
 
இந்நிலையில், காப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், சிறுமிகளை கடத்தியதற்காக தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
 
இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். 
 
மேலும் காப்பகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததாலும், குற்றச்செயல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றவாளி அத்துமீறி நுழைந்ததற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2½ லட்சம் இழப்பீடாக டி.இ.எல்.சி. நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை இதற்கான உத்தரவு கிடைத்த 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் கூறினார். 
 
இந்தத் தொகையை டி.இ.எல்.சி. நிர்வாகம் சிறுமிகளுக்கு வழங்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்து அந்த தொகையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
 
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நலன்கருதி, அவர்கள் படிப்பதற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்றும், 18 வயது முடிந்ததும், அவர்களின் படிப்புக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறினார். 
 
அத்துடன், சிறுமிகளுக்கு வழங்கப்படும் படிப்பு மற்றும் உதவிகளை ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர் சண்முக நாதன் என்பவரை நியமித்து ஒவ்வொரு மாதம் 31 ஆம் தேதி ஆய்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி அதற்கான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கறிஞருக்கான செலவை சட்ட உதவி ஆணையம் வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.