வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 7 மே 2015 (09:44 IST)

எதிர்காலத்தில் மதிமுக அரசியல் வெற்றிகளை குவிக்கும்: வைகோ உறுதி

எதிர்காலத்தில் மதிமுக அரசியல் வெற்றிகளை குவிக்கும், மதிமுகவை யாரும் ஒதுக்கிவிட முடியாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 
மதிமுக 22 ஆவது ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். 
 
இந்த விழாவுக்கு, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், மாவட்ட செயலாளர்கள் பாலவாக்கம் சோமு, ஜீவன், வேளச்சேரி மணிமாறன், செய்தி தொடர்பாளர் நன்மாறன், தேர்தல் பணிச்செயலாளர் கே.கழககுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் உள்ள பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அப்போது வைகோ கூறியதாவது:-
 
மதிமுக தொடங்கப்பட்டு 21 ஆண்டுகள் முடிந்து, 22 ஆவது ஆண்டு பிறந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்ட இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம். அலைகள் ஓய்வதில்லை போல் எங்களின் போராட்ட களமும் ஓய்வதில்லை.
 
சாதி, மதங்களை கடந்து தமிழக மக்களின் நலனுக்காக போராடி வருகிறோம். மேகதாது, காவிரி, முல்லை பெரியாறு, மதுவிலக்கு என்று அனைத்து பிரச்சினைகளுக்காகவும் நாங்கள் களம் கண்டுள்ளோம்.
 
தமிழகத்தின் எதிர்காலத்தை வளம் கொண்டதாக மாற்றவும், அரசியலை வென்றெடுக்கவும் தொடர்ந்து நாங்கள் பயணிப்போம். மதிமுக தொண்டர்களின் தியாகத்தால் உருவான கட்சி. பதவி வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் கூடிய தொண்டர்கள் கொண்ட இயக்கம்.
 
எதிர்காலத்தில் மதிமுக அரசியல் வெற்றிகளை குவிக்கும். மதிமுக வை யாரும் ஒதுக்கி விட முடியாது. அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறோம். அந்த வகையில் எதிர்கால வெற்றிக்காக இன்றே சபதம் எடுத்துக்கொள்கிறோம்.
 
ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு எதிர்நோக்கி, இன்றைக்கு தமிழக அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்து போய் உள்ளது. இதில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும்.
 
மேகதாது அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு, தமிழகத்தை வஞ்சித்து விட்டு, விவசாயிகளின் நிலங்களை பறிக்க சட்டம் கொண்டு வந்துள்ள பாரதீய ஜனதா அரசு, ஒட்டு மொத்த அமைச்சர்களையும் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தாலும், அவர்களால் தமிழக மக்களின் நம்பிக்கையை ஒரு போதும் பெற முடியாது. இவ்வாறு வைகோ கூறினார்.