“இன்று முதல் அரசியல் பிரவேசம் தொடங்குகிறது”: ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்து தீபா அதிரடி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (22:08 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்ததோடு தனது அரசியல் பிரவேசம் தொடங்குகிறது என்று கூறியுள்ளார்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்பட நான்கு பேர்களும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. மேலும், சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோர் சரண அடைய வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

இந்த தீர்ப்பு வெளியான அடுத்த நிமிடம் சசிகலா ஆதரவாளர்கள் சோகத்திலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியிலும் திளைத்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு படி மேலே போய் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

சசிகலா சிறைக்கு செல்ல இருப்பதால், யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? யார் முதலமைச்சர் பதவியை ஏற்க போகிறார்கள் என்ற தெளிவான நிலை எதுவும் தமிழகத்தில் இல்லை.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று 9.20 மணிக்கு வந்தார். அவருக்கு முன்பாக அவருக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரும் வந்திருந்தனர். இதன் பின்னர் சிறிது நேரத்தில் தீபா ஜெயலலிதா சமாதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, ‘’அரசியல் பிரவேசம் இன்று முதல் தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவோம்’’ என்று தெரிவித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :