வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (13:39 IST)

ஹெல்மட் அணியாமல் சென்ற பொறியாளரை அறைந்த காவலர்; கேட்கும் திறன் இழப்பு

மதுரையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பொறியியல் பட்டதாரியை காவலர் ஒருவர் அறைந்ததில் அவரின் கேட்கும் திறன் இழந்துள்ளது.
 

 
மதுரை கோவில் பாப்பாகுடியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விமல்குமார் [24] சனிக்கிழமையன்று வேலை நிமித்தம் சென்னைக்கு நேர்காணல் செல்ல இருந்துள்ளார். அதற்கு முன்பாக கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
 
சென்றுவிட்டு திரும்புகையில், வழியில் போக்குவரத்து காவல் துறையினர் மூன்றுபேர் வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளனர். அப்போது விமல்குமார் பதற்றத்தில் வண்டியை நிறுத்த முயன்றபோது, நிலைதடுமாறி ஒரு காவலர் மீது விழுந்திருக்கிறார்.
 
இதில் ஆத்திரமடைந்த காவலர், திடீரென விமல்குமாரின் இடது கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், விமல்குமாரின் இடது காதில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியுள்ளது. இதனால் அவர் அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.
 
உடனே, விமல்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விமல்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது இடது காதின் ஜவ்வு கிழிந்து, கேட்கும் திறனை இழந்துவிட்டதாக கூறியுள்ளனர். 
 
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை கமிஷனர் சைலேஷ்குமார் யாதவிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.