வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (14:19 IST)

ராம்குமார் குற்றவாளியா? மீண்டும் முதல் தடயத்தில் விசாரணையை தொடங்கிய காவல்துறை

ராம்குமார் குற்றவாளியா? மீண்டும் முதல் தடயத்தில் விசாரணையை தொடங்கிய காவல்துறை

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை வீடியோ எடுத்து, ஏற்கனவே  உள்ள வீடியோ பதிவுடன் ஓப்பிட்டு பார்க்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


 

 
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் துறையினர் ராம்குமார் என்பவரை குற்றவாளியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். 
 
இந்த வழக்கில் பல மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், ராம்குமார் குற்றவாளி இல்லை என்று ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் கூறிவருகிறார். சமூக வலைதளத்திலும் ஒரு அமைப்பினர் இது ஆணவக் கொலை என்றும், இதில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்றும், கூறிவருகின்றனர்.
 
காவல்துறையினர் ராம்குமாரை குற்றவாளி என்று நிரூபிக்க பல தரப்பில் ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் ராம்குமாரை வீடியோ எடுத்து, முந்தைய சிசிடிவி கேமிரா வீடியோ பதிவுடன் ஒப்பிட்டுப் பார்க்க காவல்துறையினருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
 
ராம்குமாரை வீடியோ, புகைப்படம் மற்றும் உடல் தொடர்பான அளவீடுகள் எடுப்பதற்கு, தேவையான ஏற்பாடுகளை புழல் சிறை-2 கண்காணிப்பாளர் செய்து தரவேண்டும். காவல்துறை புகைப்பட பிரிவில் துணை ஆய்வாளர் தகுதிக்கு குறையாத நபர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வேண்டும். 
 
வீடியோ உள்ளிட்டவற்றை எடுத்தவுடன் அவற்றை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். பின்னர் அடுத்தகட்ட ஆய்வுக்காக தடயவியல் துறைக்கும் அனுப்ப வேண்டும், என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.