வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (11:57 IST)

காவல் நிலையங்களில் அகற்றப்படும் ஜெ. போட்டோ - அதிகாரிகள் அதிரடி

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 

 
பொதுவாக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் முதலமைச்சரின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். அப்படித்தான் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாட்டப்பட்டிருந்தது.
 
ஆனால், அவர்  மரணமடைந்துவிட்டார். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் அவரை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்ததால், அவரது படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். ஆனால், இதுபற்றி அரசு தரப்பில் எந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை. 
 
ஆனாலும், பல அலுவலகங்களில் ஜெ.வின் படத்தை வைத்திருப்பதா? இல்லை அகற்றுவதா? என பல அதிகாரிகள் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.
 
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான காவல் நிலையங்களில், ஜெ.வின் படங்கள் அகற்றப்பட்டு, தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் படம் வைக்கப்பட்டு வருகிறது. தேவையில்லாத சர்ச்சையில் காவல்துறை சிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
 
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், ஜெ. படம் அகற்றப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியின் படமே வைக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் எவரும் உத்தரவு பிறப்பிக்காத நிலையில், போலீசார் அவர்களாகவே, ஜெ.வின் படத்தை அகற்றி வருகின்றனர்.