1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2015 (08:55 IST)

மரணமடைந்த 10 காவல்துறையினரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதி: ஜெயலலிதா அறிவிப்பு

பணியின்போது மரணமடைந்த 10 காவல்துறையினரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
கோயம்புத்தூர் மாநகரம், பீளமேடு போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த மாகாளியப்பன் 11.6.2015 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்; தேனி மாவட்டம், கோம்பை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாண்டியன் 13.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்; கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த பாலகிருஷ்ணன் 14.6.2015 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்; சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த செந்தில் ராஜா 14.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;
 
சென்னை பெருநகர காவல், போதை பொருள் நுண்ணறிவு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மகாதேவன் 15.6.2015 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியையும்; தஞ்சாவூர் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த செல்வி சாந்தா 15.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்; சென்னை பெருநகர காவல், மணலி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பெருமாள் 18.6.2015 அன்று பொன்னேரி நெடுஞ்சாலை அருகே போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
 
சிவகங்கை மாவட்டம், எஸ்.வி.மங்களம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சுப்பிரமணி 18.6.2015 அன்று கொட்டாம்பட்டி அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 20.6.2015 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சேவியர் ஜோசப் ராஜ் 19.6.2015 அன்று போத்தனூர் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 20.6.2015 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
 
சென்னை பெருநகர காவல், ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த கர்ணன் 20.6.2015 அன்று திருமங்கலம் சாந்தி காலனி அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓர மரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
 
காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மாகாளியப்பன், பாண்டியன், பாலகிருஷ்ணன், மகாதேவன்; தலைமைக் காவலர்கள் செந்தில் ராஜா, சாந்தா, பெருமாள், சுப்பிரமணி, சேவியர் ஜோசப் ராஜ்; முதல்நிலைக் காவலர் கர்ணன் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்க நான் உத்தர விட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.