1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (01:23 IST)

காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த தம்பதிகள் கைது

காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ 12 லட்சம் மோசடி செய்த கன்னியாகுமரி தம்பதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம், தொலையாவட்டத்தை சேர்ந்த வினிஷா(23) என்பவர் ஊர்காவல் படையில் பணியாற்றி வருகிறார். 
 
அதே போல, அருமனை மேல்பாலை பகுதியை சேர்ந்த கண்ணன் - சிபுஷைனி ஆகிய இருவரும் அதே ஊர் காவல்படையில் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில், வினிஷாவுக்கு ரயில்வே காவல்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 ஆயிரத்தை கண்ணன் - சிபுஷைனி தம்பதிகள் பெற்றுள்ளனர். ஆனால், குறித்த நேரத்தில் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. அதே போல் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
 
இது குறித்து, வினிஷா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளித்தார். அப்புகார் குறித்து விசாரணை நடத்த, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.
 
அதன் பேரில்,  கண்ணன்- சிபுஷைனி தம்பதிகளிடம் தீவிர விசாரணை நடத்திய மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
 
காவல்துறை விசாரணையில், இந்த தம்பதிகள் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.12 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.