Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமல்ஹாசன் கவிதைக்கு அர்த்தம் இதுதான் ; கவிஞர்களின் கவிஞர் அவர் : மகுடேஸ்வரன்


Murugan| Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2017 (18:24 IST)
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு கவிதை வெளியிட்டிருந்தார். அது புரிந்து கொள்வதற்கு சற்று கடினமாக இருந்ததாக இணையதள வாசிகளால் கூறப்பட்டது.

 
 
இந்நிலையில், கவிஞர் மகுடேஸ்வரன், எல்லோரும் சுலபமாக புரிந்து கொள்ளும்படி கமல்ஹாசனின் கவிதைக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
ஹிம்சை என்றால் துன்பம். புரி என்றால் தலைநகரம். “துன்பத்தின் தலைநகரம்” என்பது தலைப்பு.


 

 
போதியின் நிழலில் ஏற்றிய விளக்கு ஆத்திக வெயிலில் வியர்த்துக் கருத்தது: போதி மரத்தடி நிழலில் புத்தன் பெற்ற ஞானத்தால் ஏற்றி வைத்த ஞான விளக்கு, ஆத்திகப் பரவலின் வெய்யிலின் வெப்பம் தாங்காமல் வியர்த்தது. அதன் ஒளிமங்கிக் கறுத்தும்போனது. புத்தர் ஏற்றிவைத்த பகுத்தறிவுக் கருத்துகளின் ஒளி ஆத்திகத்தால் இங்கே நிலைமங்கியது. (கறுத்தது என்பது சரியான பயன்பாடு).
 
தச்சன் ஒருவன் அறிவைச் சீவித் தானே அறைபடச் சிலுவை செய்தனன்: தச்சனாய்ப் பிறந்த ஒருவன் தன் அறிவைக் கூர்மைப்படுத்தித் தானே அறைபட்டுச் சாவதற்குச் சிலுவைக் கருத்துகளைச் செய்தான். இயேசுவின் அன்புவழிக் கருத்துகள் அவரையே கொன்றன. (சீவித் தானே என்று வலிமிகவேண்டும்).
 
ஜாரின் கோலிற் செம்மை இலையெனச் சினந்து சிவந்த குடியொன்றுயர்ந்தது: ஜார் மன்னனின் ஆட்சியில் செங்கோல் தவறியது, செம்மை இல்லை என்று சினந்த இரசியாவில் சிவப்புப் புரட்சி நிகழ்ந்து குடிகளின் வாழ்வு உயர்ந்தது.
 
யூதப் பெருமான் அணுவை விண்டதில் ஆயுதம் கண்டனர் அமெரிக்கச் சித்தர்: ஐன்ஸ்டீன் என்கின்ற யூதர் அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு அணுவைப் பற்றிக் கூறினார். அதையே பின்பற்றி அணு ஆயுதம் செய்துவிட்டனர் தற்கால அமெரிக்கச் சித்தர்கள். இங்கே சித்தர் என்பது அழிவுக்கொள்கையுடைய சித்தமுடையோர் என்று ஏளனமாய்க் குறிப்பது.
 
ஒற்றைக் கழியோன் அஹிம்சையில் பெற்றது உற்றது இன்று ஹிம்சாபுரியாய்:  கழி என்றால் ஊன்றுகோல். ஒற்றை ஊன்றுகோலை ஊன்றி நடந்தவராகிய காந்தி அன்புவழியால் ஆக்கிப் பெற்றெடுத்த நிலம் இன்று துன்பத்தின் தலைநகரம் ஆகிவிட்டது.
ஹிம்சாபுரி (2001) என்ற தலைப்பும் காந்தியைப் பற்றிய இறுதி இரண்டு அடிகளும் இக்கவிதை நாட்டின் தற்கால வன்முறைப் போக்கு பற்றியது என்பதற்கான தடயங்கள்.
 
கமல்ஹாசன் கவிஞர்களின் கவிஞர். ஐயமில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :