மக்கள் பாவலர் இன்குலாப் இன்று மரணம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (12:55 IST)
சாகுல் ஹமீது என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் இன்குலார் அவர்கள் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர், பேராசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். ஒடுக்குமுறைக்கு எதிரான படைப்புகளை அதிகம் படைத்தவர் இன்குலாப்.

 

1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாட்டில் வெடித்தது. அப்போது உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன் கா. காளிமுத்து பா. செயப்பிரகாசம் ஆகியோருடன் இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக இறங்கினார். காவல் துறையின் தடியடிகளுக்கும் ஆளானார். சிறைக்கும் சென்றார்.

மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா.லெ.அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்த நிகழ்வு இன்குலாப்பின் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்று.

தஞ்சை மாவட்டம் கீழ் வெண்மனியில், அரை படி நெல் கூலி உயர்வு கேட்ட விவசாய தொழிலாளர்களின் குடிசைகளுக்கு, பண்ணையார்கள் தீவைத்து எரித்தபோது, ”மனுஷங்கடா.... நாங்க மனுஷங்கடா.. உன்னைப் போல, அவனைப் போல எட்டு சாணு ஒசரமுள்ள மனுஷங்கடா” என்று அவர் எழுதிய பாடல் தமிழகமெங்கும் பற்றி எரிந்தது.

தனது வாழ்நாளின் இறுதிவரை தமிழ்நாட்டில் மட்டுமன்றி, உலகெங்கிலும் நடைபெறும் ஒடுக்குமுறைக்கு எதிராக தனது கண்டனக் குரலை பதிவு செய்தவர்.

ஒரு முறை அவரை உளவு பார்த்த காவல் அதிகாரி, பொதுக்கூட்டம் ஒன்றில் இன்குலாப் ஐயா பேசியதை பார்த்துவிட்டு, “நீங்கள் உங்கள் ’சிகப்பு’ முகத்தை காட்டிவிட்டீர்கள்” என்கிறார்.

அதற்கு பதிலாக இவர், “நீங்கள் உங்கள் காவி முகத்தை காட்டி விட்டீர்கள்” என்று கர்ஜனை செய்தவர். அத்தகைய அஞ்சா நெஞ்சம் படைத்தவர் இன்குலார் அவர்கள்.

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் என்ற அவரது மற்றொரு கவிதையும் பிரசித்திப் பெற்றது. அதில் இவ்வாறு எழுதியிருப்பார்.

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!

உடல்நலக் குறைவுக் காரணமாக ஊரப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கவிஞர் இன்குலாப் அவர்கள் இன்று காலை மரணமடைந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :