வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (13:11 IST)

கேரளாவைப் போல் தமிழகத்திலும் முழு மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் - ராமதாஸ்

மதுக்கடைகள் மூடப்பட்டு வருவதால், கேரளாவில் குற்றச்செயல்கள் மற்றும் சாலை விபத்துகள் குறைந்து வருவதாகவும், தமிழகத்திலும் முழு மதுவிலக்கை கொண்டுவர அரசு முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஒட்டுமொத்த இந்தியாவிலும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாத சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கை செயல்படுத்த முடியாது என்று தமிழக ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அண்டை மாநிலமான கேரளம் முழு மதுவிலக்கை நோக்கி விரைவான பயணத்தைத் தொடங்கியுள்ளது.
 
கேரள மாநிலத்தில் 383 மதுக்கடைகளும், 752 குடிப்பகங்களும் செயல்பட்டு வந்தன. அவற்றில் 418 குடிப்பகங்களை கேரள அரசு அதிரடியாக மூடியது. அதன்பின்னர் மேலும் 18 குடிப்பகங்களும், 45 மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டன. இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றும், வெகுவிரைவில் முழு மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் உம்மன்சாண்டி தலைமையிலான கேரள அரசின் நோக்கம் என்றும் கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வி.எம்.சுதீரன் தெரிவித்துள்ளார்.
 
2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கேரளத்தில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மக்களைக் காப்பதற்கான கேரள அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
 
கேரளத்தில் மதுக்கடைகளும், குடிப்பகங்களும் மூடப்பட்டதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 418 குடிப்பகங்கள் மூடப்பட்ட பிறகு குற்றச்செயல்கள் 15 சதவீதமும், சாலை விபத்துகள் 10 சதவீதமும் குறைந்திருப்பதாக கேரள குற்ற ஆவணக்காப்பகம் கூறியுள்ளது.
 
அதுமட்டுமின்றி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறைகள் ஆகியவையும் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், மதுவுக்கு எதிராக கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் அம்மாநிலத்தில் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமுதாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
எனவே, இனியும் மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு கேரளம் காட்டும் வழியில் படிப்படியாகவோ அல்லது ஒரே கட்டத்திலோ தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.