வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (20:56 IST)

அரசு பேருந்துகளை கல் வீசி தாக்கிய பாமகவினர் கைது

பள்ளிகொண்டாவில் நடைபெற்ற பாமக மாநாட்டின்போது, அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த அந்தக் கட்சியினரை காவல்துறையினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்தனர்.
 
பள்ளிகொண்டாவில் பாமக வடக்கு மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் நின்ற 7 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை மாநாட்டுக்கு வந்த பாமகவினர் உடைத்தனர்.
 
இதுகுறித்து பள்ளிகொண்டா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். சுங்கச் சாவடி அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சி பதிவாகி இருந்தது. இதைப் பார்த்தபோது பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்தவர்கள் யார் என்பது தெரியவந்தது.
 
இதையடுத்து, கந்தனேரியைச் சேர்ந்த சாமி மகன் உதயகுமார் (23), செல்வராஜ் மகன் மணி (21), சம்பத் மகன் சிலம்பரசன் (21), சம்பத்குமார் மகன் கவியரசன் (32), தேவலாபுரத்தைச் சேர்ந்த மோகன் மகன் சுரேஷ் (32), தங்கவேல் மகன் சுப்பிரமணி (40) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பாமகவைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.