1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (21:33 IST)

தன்னை உத்தமர் என்று நிரூபிக்க பச்சமுத்து தயாரா? : பாமக கே.பாலு கேள்வி

எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட மோசடி புகாரில், தன்னை உத்தமர் என்று நிரூபிக்க பாரிவேந்தர் என்றழைக்கப்படும் பச்சமுத்து தயாரா என்று பாமக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு பணம் வசூலித்து தலைமறைவான மதனை கைது செய்வதில் தாமதம் ஏன்? இந்த மோசடியின் மூலகர்த்தா பச்சமுத்துவிடம் விசாரணை நடத்த அரசும், காவல்துறையும் தயங்குவது ஏன்? என பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வினா எழுப்பியிருந்தார். அதற்கு காவல்துறையும், அரசும் பதிலளிப்பதற்கு பதில் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் பச்சமுத்து தானாக முன்வந்து பொங்கியிருக்கிறார். காவல்துறை தவறி கூட நடவடிக்கை எடுத்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் வக்காலத்து வாங்கியிருக்கிறார். பதற்றம் அவரது பதிலில் நன்றாக தெரிகிறது.
 
ஒரு மூன்றாம் தர மனிதனின் நான்காம் தர அறிக்கைக்கு அடையாளமாக பச்சமுத்துவின் அறிக்கை அமைந்திருக்கிறது. ‘ஒருவன் எதுவாக நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான்’ என்பது மூத்தோர் வாக்கு. அதைப்போல் தான் தாம் நடந்து செல்லும் பாதையில் கிடப்பதையெல்லாம் தமது அறிக்கையில் கொண்டு வந்திருக்கிறார் பச்சமுத்து. அவரது தரம் அது தான். அதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. 
 
இப்படிப்பட்டவருக்கு பதிலளிக்க வேண்டியிருப்பதையே வாழ்நாளின் மோசமான தருணமாக கருதுகிறேன்.
 
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்ப்பதாகக் கூறி கோடிக் கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது உண்மை. பணம் வசூலித்துக் கொடுத்த மதன், இதை அவரது கடிதத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். வசூலித்த பணம் முழுவதையும் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டதாக கூறியிருக்கிறார். பணத்தை கொடுத்த 109 பேரும் பச்சமுத்து கூறியதன் பேரில் தான் மதனிடம் பணம் தந்ததாக கூறியிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் விசாரிக்கப்பட வேண்டிய இரு நபர்கள் பச்சமுத்துவும், மதனும் தான் என்பது படிக்காத பாமரர்களுக்குக் கூடத் தெரியும். ஆனால், காணாமல் போன மதனை காவல்துறை கண்டுபிடிக்கவும் இல்லை; பக்கத்திலேயே இருக்கும் பச்சமுத்துவிடம் விசாரணை நடத்தவும் இல்லை. இதைத் தான் மருத்துவர் மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டிருந்தார். அதைக் கேட்டதும் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததன் விளைவாகத் தான், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக விவகாரத்தில் மருத்துவர் அய்யாவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? என்று பதிலளிக்க முடியாத கடினமான வினாவை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து எழுப்பியிருக்கிறார்.
 
தமிழகத்தில் கல்விக் கொள்ளை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்காகவும் களமிறங்கி போராடி வரும் ஒப்பற்ற ஒரே தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். அதனால் தான் எஸ்.ஆர்.எம். குழுமத்திடம் பணம் தந்து ஏமாந்த மாணவர்கள் அனைவரும் மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து தங்களுக்காக நீதி பெற்றுத் தரும்படி வேண்டுகோள் விடுத்தனர். அந்த அடிப்படையில் தான் இந்த விஷயத்தில் நீதி கேட்டு மருத்துவர் அய்யா போராடி வருகிறார். மற்ற தலைவர்கள் வேண்டுமானால் பச்சமுத்து போன்றவர்களின் கல்விக் கொள்ளையை கண்டு கொள்ளாமல் வாய்மூடி இருக்கலாம். மருத்துவர் அய்யா அவர்கள் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் ஏழை பாட்டாளிகளின் தலைவரே தவிர பச்சமுத்து போன்ற கல்விக் கொள்ளையரை பாதுகாக்க அவதாரம் எடுத்தவர் அல்ல. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் நீதி பெற்றுத்தரும் வரையில் இப்பிரச்சினையிலும் அவர் ஓயமாட்டார்.
 
மருத்துவப் படிப்புக்கு மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பச்சமுத்து குழுமம் ஏமாற்றிவிட்டது என்பது தான் குற்றச்சாற்று. அதற்கு பதிலளிக்க முடியாத பச்சமுத்து, மருத்துவர் அய்யாவை எதிர்க்க யார் யாரையோ துணைக்கு அழைத்திருக்கிறார். அய்யோ பாவம்... அவருக்கு கடந்தகால வரலாறு தெரியாது போலிருக்கிறது. மருத்துவர் அய்யாவின் பக்கம் நீதி இருக்கிறது... நேர்மை இருக்கிறது. அதனால் தான் கடந்த காலங்களில் அய்யாவை எதிர்த்தவர்கள் மண்ணை கவ்வியிருக்கிறார்கள். இப்போதும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நின்று தான் மருத்துவர் அய்யா போராடிக் கொண்டிருக்கிறார். இந்த தர்மயுத்தத்திலும் வெற்றி பெறப்போவது அய்யா அவர்கள் தானே தவிர கல்விக் கொள்ளையர்கள் அல்ல என்பதை பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் உணர வேண்டும்.
 
இரு சமுதாயங்களின் ஒற்றுமை கருதி தான் தாம் அமைதி காப்பதாக பச்சமுத்து கூறியிருக்கிறார். சோளக்கொல்லை பொம்மைகள் எல்லாம் தங்களை போர்ப்படைத் தளபதிகளாக நினைத்துக் கொண்டால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் பச்சமுத்துவின் சுயபுராணமும் இருக்கிறது. எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக மோசடியைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் பிற்படுத்தப்பட்ட சாதி அமைப்பின் தலைவர் என்று தன்னைத் தானே பச்சமுத்து கூறிக்கொள்கிறார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மோசடிக்கும், பச்சமுத்து சார்ந்த சமுதாயத்துக்கும் என்ன சம்பந்தம்?


 

 
பல்கலைக்கழகத்தில் அச்சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகள் எத்தனை பேருக்கு நன்கொடை இல்லாமல் இடம் கொடுத்திருக்கிறார். எஸ்.ஆர்.எம் குழும கல்வி நிறுவனங்களில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ஆண்டுக்கு 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திற்கும் ரூ.62 லட்சம் வசூலிக்கப்படுவதாக பணம் கொடுத்தவர்களே கூறியிருக்கின்றனர். அவற்றில் எத்தனை இடங்கள் தாம் சார்ந்த சமுதாய மக்களுக்கு நன்கொடை இல்லாமல் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை பச்சமுத்து விளக்குவாரா? உலகமகா மோசடிகளை செய்து விட்டு, உழைக்கும் சாதி மக்களின் பின் ஒளிந்து கொண்டு தப்பித்து விடலாம் என பச்சமுத்து நினைத்தால் அவரை அந்த மக்களே விரட்டியடிப்பார்கள். அனைத்து சமுதாய மக்களின் நலன்களையும் காக்கும் தலைவராக மருத்துவர் அய்யா திகழ்கிறார். அனைத்து தரப்பு மக்களையும் அமைதிப் படுத்தும் மந்திரம் அய்யாவுக்கு தெரியும். எனவே, ஊசிப்பட்டாசு வெடித்து அச்சுறுத்தும் வீண் வேலை வேண்டாம்.
 
பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக மட்டுமின்றி, உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறேன். அவ்வகையில் மருத்துவர் அய்யா எழுப்பியுள்ள கேள்விகள் எதுவும் காவல் மற்றும் நீதித்துறைக்கு களங்கம் கற்பிப்பவை அல்ல. ஆனால், படிக்காமலேயே டாக்டர் பட்டம் வாங்கிய பச்சமுத்து, சட்டம் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு மற்றவர்களைப் பற்றி வினா எழுப்ப வேண்டும். மருத்துவர் அய்யா அவர்களின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி நிலம் வாங்கியது குறித்து பச்சமுத்து அவரது அறிக்கையில் அவதூறுகளை அள்ளித் தெளித்திருக்கிறார்.

அய்யாவின் மகள் மீது அளிக்கப்பட்ட பொய்ப் புகார் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அடுத்த இரு நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தி, அதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்ற உயர்நீதிமன்றமும் வழக்கை முடித்து வைத்து விட்டது. இந்த அடிப்படை கூட அறியாமல் பச்சமுத்து என்ற பாரிவேந்தர் உளறினால், அவதூறு வழக்கை சந்திக்க நேரிடும்.
 
* மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிராக பச்சமுத்து சில வாரங்களுக்கு முன் சில வினாக்களை எழுப்பியிருந்தபோது, அதற்கு பதிலளித்த பா.ம.க.‘‘வன்னியர் அறக்கட்டளை குறித்த ஆய்வுக்குத் தயார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் குறித்த விசாரணைக்கு தயாரா?’’ என வினா எழுப்பியிருந்தோம். இதுவரை அதற்கு பச்சமுத்து பதிலளிக்கவில்லையே... மடியில் கனமிருப்பதால் வழியில் பயமா?
 
* நாற்பதாண்டுகளாக கறைபடாமல் கல்விச் சேவையாற்றி வருவதாக கூறிக்கொள்ளும் பச்சமுத்து, எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்ட பிறகு பொறியியல் படிப்புக்கும், மருத்துவப் படிப்புகள் தொடங்கப்பட்ட பிறகு கடந்த 8 ஆண்டுகளாக அந்த படிப்புக்கும் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விளக்கவும், இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளின் விடைத்தாட்கள், சேர்க்கப்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை வெளியிடவும் பச்சமுத்து தயாரா?
 
* எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் படிப்புகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டதை விட ஒரு ரூபாய் கூட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை மனசாட்சியைத் தொட்டு பச்சமுத்துவால் கூற முடியுமா?
 
* மதன் எழுதிய கடிதத்தில் உள்ளதெல்லாம் வேதவாக்கா? என்று வினா எழுப்பும் பச்சமுத்து, கடந்த காலங்களில் மதன் எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டை வாங்கிக் கொண்டு மாணவர்களை சேர்க்கவில்லையா? அந்த துண்டுச்சீட்டில் உள்ள கணக்கை வேதவாக்காக கருதி கோடிகளை வாங்கிக் குவித்தது உண்மையா... இல்லையா?
 
* எந்த தவறும் செய்யாத உத்தமர் என்று தனக்குத் தானே கூறிக் கொள்ளும் பச்சமுத்து, மருத்துவப் படிப்பில் சேர பணம் கொடுத்து ஏமாந்ததாக புகார் அளித்துள்ள 109 பேரையும் அழைத்து, சமூகத்தில் மதிப்பு மிக்கவர்கள் முன்னிலையில், ‘‘அவர்களை சந்திக்கவே இல்லை; அவர்களிடம் பணம் வாங்கவே இல்லை’’ என்பதை நிரூபிக்கத் தயாரா?
 
பச்சமுத்து உண்மையாகவே கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்றால், நான் எழுப்பியுள்ள மேற்கண்ட வினாக்களுக்கு ஆதாரங்களுடன் விளக்கம் அளித்து தம்மை உத்தமர் என்று நிரூபித்துக் கொள்ளட்டும். கறையையே கரமாகக் கொண்ட அவரால் அது முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் காலில் விழுந்து காரியம் சாதிப்பது தான்.மருத்துவர் அய்யா அவர்களின் கால்களில் விழுந்து வணங்கிய போது அவரது முகத்தில் ஒட்டிய தைலாபுரம் தோட்டத்து மண் இன்னும் விலகவில்லை. அதேபோல் ஆட்சியாளர்களின் கால்களில் விழுந்து காவல்துறையின் பிடியிலிருந்து தற்காலிகமாக தப்பிக்கலாம். ஆனால், சட்டம் மற்றும் நீதியின் பிடியிலிருந்து பச்சமுத்து என்கிற பாரிவேந்தரும், மோசடியில் அவருக்கு துணை நின்றவர்களும் ஒருபோதும் தப்ப முடியாது.