வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 8 அக்டோபர் 2016 (13:25 IST)

ஜெ. மருத்துவமனையில்: அதிமுக அரசை சீர்குலைக்க பிரதமர் மோடி முயற்சி?

ஜெ. மருத்துவமனையில்: அதிமுக அரசை சீர்குலைக்க பிரதமர் மோடி முயற்சி?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலை பயன்படுத்தி அதிமுக அரசை சீர்குலைக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.


 
 
தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது, ஒரு மாநிலத்தில் எதிர் கட்சியோ அல்லது மாநில கட்சியோ ஆட்சியில் இருந்தால் அந்த ஆட்சியை எந்தெந்த வகையில் சிதறடிக்க வேண்டுமோ அந்த திட்டத்தை அருணாச்சல பிரதேசத்தில் இருந்து எல்லா மாநிலங்களிலும் கையாளுகிறார் மோடி என்றார்.
 
மேலும் இதனையே மேற்கு வங்கத்தில் செய்து கொண்டிருக்கிறார். பீகாரிலே அப்படி செய்ய முயற்சிக்கிறார். ஒவ்வொரு மாநிலங்களிலும் செய்து பார்க்கிறார். அது அவருடைய நடைமுறை. இதை சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாகவே சொல்லிக் காட்டுகிறார். பொதுவாக எந்தெந்த இடங்களில் மாநிலக் கட்சிகள் வலுவாக இருக்கிறதோ அந்த வலுவைக் குறைப்பது என்பது பாஜகவை வளர்ப்பதற்கு துணை நிற்கும் என்பது மோடியின் நிலைப்பாடு.
 
இதனை பல மாநிலங்களில் முயற்சித்த பிரதமர் மோடி, தோற்றும் போயுள்ளார் வென்றும் உள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் அதிமுகவை கூறு போட முயற்சிக்கிறார் பிரதமர் மோடி என கூறிய அவர், பிரதமர் மோடி ஆளுநர்களை வைத்து மாநில கட்சிகளை மிரட்டுகிறார். அதிமுக இன்று கலக்கத்தில் இருக்கிறது, இந்த கலக்கத்தை அதிகப்படுத்தி அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக. இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் குற்றம்சாட்டினார்.