வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 20 மார்ச் 2016 (20:59 IST)

பிரதமர் தேவையில்லாத முயற்சியில் ஈடுபட வேண்டாம் - கருணாநிதி கண்டனம்

நெய்வேலி" என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு வந்த இந்த நிறுவனத்தின் அழகான தமிழ்ப் பெயரை மாற்றுவதற்கு, பிரதமர் தேவையில்லாத முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை:
 
கேள்வி : காவல் துறையில் நிரப்பப்படாமல் ஏராளமான பணி இடங்கள் காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறதே?
 
பதில் : இது தொடர்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், “தமிழகக் காவல் துறையில் மொத்தம் 19 ஆயிரத்து 157 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டுப் பெற்றுள்ளேன். போதுமான எண்ணிக்கையில் போலீசாரை நியமிக்க தமிழக அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருக்கிறார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் அவர்களும், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அவர்களும், ``சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் காவல் துறையில் காலியாக உள்ள இந்த 19,157 பணி இடங்களை நிரப்ப வேண்டும்’’ என்று தமிழக அரசுக்கு  உத்தரவிட்டிருக்கிறார்கள்.
 
எந்தத் துறையில் எத்தனைக் காலிப் பணியிடங்கள் இருந்தால் நமக்கென்ன; காலியாக இருந்த தமது பைகளை நிரப்பிக் கொண்டால் போதும் என்ற கவலையில் அல்லவா ஆட்சியாளர்கள் காலத்தைக் கழித்து விட்டார்கள்!
 
கேள்வி : உண்மையில் அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ந்ததா?
 
பதில் : ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன், கேளுங்கள். ஒவ்வொரு ஆண்டும், தொழில் வளர்ச் சிக்காக, "சிட்கோ" நிறுவனத்தின் சார்பில், "இரும்பு, மற்றும் எஃகு மூலப் பொருள்கள் நேரடி விற்பனையின் மூலமாக வழங்கப்படும். எவ்வளவு விற்பனை என்று பார்த்தாலே இந்த ஆட்சியில் தொழில் வளர்ந்ததா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
 
2011-2012ஆம் ஆண்டில் "சிட்கோ" விற்பனை செய்த இரும்பு மற்றும் எஃகு மூலப் பொருள்களின் அளவு 4,426 மெட்ரிக் டன்களாகும். 2012-2013ஆம் ஆண்டு இது 3220 மெட்ரிக் டன்களாகக் குறைந்து, 2013-2014ஆம் ஆண்டு 1804 மெட்ரிக் டன்களாகக் குறைந்துள்ளது. இவ்வாறு இரும்பு மற்றும் எஃகு மூலப் பொருள்கள் விற்பனை குறைந்து வந்திருப்பது எதைக் காட்டுகிறது என்றால், தமிழகத்திலே அரசுக்குத் தொழில் வளர்ச்சியில் அக்கறை இல்லை என்பதையும், தொழில் தொடங்குவதில் தொழில் முனைவோருக்கு அரசின் நெருக்கடிகளால் ஆர்வம் இல்லை என்பதையும்தான் வெளிப்படுத்துகின்றது.
 
கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன கதைதான்! இந்தப் புள்ளி விவரம் நானாகத் தருவது அல்ல. தமிழக அரசின், புள்ளியியல் துறை கடந்த மாதம் வெளியிட்ட புத்தகத்தில் உள்ள விவரம் இது. பொதுவாக இந்தப் புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்திலேயே கழக ஆட்சியிலே வழங்கப்பட்டுவிடும். ஆனால் இந்த அதிமுக ஆட்சியில் கடந்த ஆண்டுக்குரிய புத்தகம் (2015), இந்த ஆண்டு (2016) பிப்ரவரியில்தான் வெளிவந்திருக்கிறது. ஆனால் இன்று வரை இது விற்பனைக்கு வரவில்லை.
 
கேள்வி : பொதுத் தேர்தலையொட்டி பண நடமாட்டத்தைக் கவனிக்கிறோம் என்ற பெயரால், பறக்கும் படையினர், வணிகத்துக்காகப் பணம் எடுத்துச் செல்கின்ற வியாபாரி களையெல்லாம் சிரமப் படுத்துவதாக ஒரு செய்தி வந்துள்ளதே?
 
பதில் : பறக்கும் படையினர், சோதனையின்போது, சிறிய, நடுத்தர வணிகர்கள் கொள்முதலுக்குக் கொண்டு செல்லும் பணம், பொதுமக்கள் சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்கிறார்களாம்.
 
இந்தப் பிரச்சினை குறித்து தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, தமிழகத் தலைமைத் தேர்தல் அதி காரியை நேரில் சந்தித்து முறையிட்டுக் கொண்டிருக்கிறார். பறக்கும் படையினர், சோதனையின்போது, சிறிய, நடுத்தர வணிகர்கள் கொள்முதலுக்குக் கொண்டு செல்லும் பணம், பொதுமக்கள் சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்கிறார்களாம்.
 
உரிய ஆவணங்களைக் காட்டிய பிறகும், பணத்தைத் திருப்பிக் கொடுக்க அலைய விடுகிறார்களாம். தேர்தலுக்காகப் பணம் எடுத்துச் செல்பவர்கள் காவல்துறை வண்டிகளிலும், ஆம்புலன்ஸ் வண்டிகளிலும் ஏராளமான பணத்தை எடுத்துச் செல்வதை இந்தப் பறக்கும் படையினர் கண்டுகொள்வது இல்லையாம். எனவே தேர்தல் அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.
 
பிரதமர் தேவையில்லாத முயற்சியில் ஈடுபட வேண்டாம்:
 
கேள்வி : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை, "என்.எல்.சி. இந்தியா லிமிடெட்" என்று மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பது பற்றி?
 
பதில் : "நெய்வேலி" என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு வந்த இந்த நிறுவனத்தின் அழகான தமிழ்ப் பெயரை மாற்றுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தப் பெயரை மாற்றுவதற்கு, அங்கே பணி யாற்றும் தொழிலாளர்களின் ஒப்புதல் நிச்சயமாகக் கிடைக்காது என்றே நான் நம்புகிறேன்.
 
மத்திய பாஜக அரசின் தேவையில்லாத வேலைகளில் இதுவும் ஒன்று. நிறைவேற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் எவ்வளவோ இருக்க, வீண் வம்பினை விலைக்கு வாங்குகின்ற வேலையாகத்தான் இதுவும் இருக்க முடியும்.
 
கல்லக்குடி என்ற தமிழ்ப் பெயரை, "டால்மியாபுரம்" என்று பெயர் மாற்ற முயற்சித்ததைப் போன்ற பிரச்சினைதான் இதுவும்! எனவே மத்திய அரசு, குறிப்பாக பிரதமர், தேவையில்லாத இந்த முயற்சியில் ஈடுபட வேண்டாமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.