வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (16:48 IST)

தயவுசெய்து விவசாய வயலை பிளாட் போட்டு விடாதீர்கள் - நடிகர் சூரி உருக்கம்

இந்த வயலையும் விவசாயத்தையும் இப்படியே தொடருங்கள்; தயவுசெய்து விவசாய வயலில் கல்நட்டு பிளாட் போட்டு விடாதீர்கள் என்று நகைச்சுவை நடிகர் சூரி வேண்டுகோள் விடுத்தார்.
 

 
‘கத்துக்குட்டி’ திரைப்படத்தின் இயக்குநர் இரா.சரவணனின் இல்லத் திருமண விழா பேராவூரணி அருகே துறவிக்காடு கிராமத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் சூரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
 
அப்போது, “இயக்குநர் சரவணன் நினைத்திருந்தால், இந்த விழாவை சென்னையில் இதைவிட பிரம்மாண்டமாக நடத்தி இருக்க முடியும்; ஆனால், தான் பிறந்த சொந்த மண்ணில் குடும்ப விழாவை நடத்துவதுதான் சரியானது என்பதை உணர்ந்து, அவர் இந்த கிராமத்தில் இவ்வளவு மக்கள் மத்தியில் நடத்தி இருக்கிறார்.
 
இந்த வயலையும் விவசாயத்தையும் இப்படியே தொடருங்கள்; தயவுசெய்து விவசாய வயலில் கல்நட்டு பிளாட் போட்டு விடாதீர்கள்.
 
கத்துக்குட்டி படத்தை பக்கா கமர்ஷியல் படமாக செய்திருக்கலாம்; ஆனால், இயக்குநர் சரவணன் அதனை மண்ணுக்கான படமாக எடுத்தார்; மீத்தேன் திட்டத்தின் அபாயங்களை அந்தப் படத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.
 
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் வேதனை நிலை இன்றைக்கும் தொடர்கிறது; பட்டினிச் சாவுகள் இந்த மண்ணில் இனியும் தொடரக் கூடாது; விவசாயிகளுக்கு நல்வாழ்வு பிறக்க வேண்டும்; பணத்துக்காக நிலத்தை விற்கும் நிலை வரக் கூடாது; என்று விவசாயிகளின் குரலாக கத்துக்குட்டி படம் ஒலிக்கச் செய்தார்; அதனாலேயே நான் அந்தப் படத்தில் ஆர்வத்தோடு நடித்தேன்“ என்றும் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறுகையில், நான் இதுவரை நடித்துள்ள 60 படங்களில், தனக்குப் பிடித்த படம் என்ன? என்று என்னைத் தூக்கத்தில் எழுப்பி கேட்டால்கூட வெண்ணிலா கபடிக் குழு, கத்துக்குட்டி என்ற இரண்டு படங்களையும்தான் சொல்வேன்” என்றார்.