வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (21:09 IST)

தலைக்கவசம் அணிவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது தொடர்பாக அரசு வெளியிட்ட அரசானையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 

 
கடந்த 18 ஆம் தேதி அன்று தமிழக உள்துறை செயலாளர், ’ஜூலை 1 ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களும், வாகனத்தின் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் மோட்டார் சைக்கிள், அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்படும் என்றும்’ அரசாணையை வெளியிட்டார்.
 
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.கோபாலகிருஷ்ணன் என்பவர், “ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால், வாகனத்தை ஓட்டியவருக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அபராதம் மட்டுமே விதிக்க முடியும். வாகன பதிவுச் சான்றிதழை பறிமுதல் செய்யவேண்டும் என்று எந்த ஒரு சட்டமும் கூறவில்லை.
 
எனவே, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனத்தில் பதிவுச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்படும் என்று கடந்த 18 ஆம் தேதி தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்யவேண்டும். அந்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
 
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயிரைக் காக்க ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிராக விளம்பரத்திற்காக வழக்கு போடுவதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கோபாலகிருஷ்ணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.