வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2015 (07:36 IST)

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல்விலை உயர்ந்தது

நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.46, டீசல் விலையும் ரூ.3.34 உயர்த்தப்பட்டது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன.
 
பெட்ரோல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக 10 முறை விலை குறைந்தது. அதேபோல டீசல் விலையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து தொடர்ந்து 6 முறை விலை குறைந்தது.
 
கடந்த மாதம் 15 ஆம் தேதி நள்ளிரவு நீண்டநாட்களுக்கு பின்னர் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு உயர்ந்தது. இப்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
 
டெல்லியில் நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.18 ம், டீசல் விலை ரூ.3.09 ம் உயர்த்தப்பட்டது.
 
சென்னையை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.46 உயர்ந்து, அதன்படி ரூ.59.85 ல் இருந்து ரூ.63.31 ஆனது. டீசல் விலை ரூ.3.34 அதிகரித்து, ரூ.49.58-ல் இருந்து ரூ.52.92 ஆனது.
 
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.57.31 ல் இருந்து ரூ.60.49 ஆகவும், டீசல் விலை ரூ.46.62 ல் இருந்து ரூ.49.71 ஆகவும் அதிகரித்தன. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.65.29 ல் இருந்து ரூ.67.92 ஆகவும், டீசல் விலை ரூ.51.54 ல் இருந்து ரூ.54.29 ஆகவும் உயர்ந்துள்ளன.
 
மும்பையில், பெட்ரோல் விலை ரூ.64.81 ல் இருந்து ரூ.68.14 ஆகவும், டீசல் விலை ரூ.53.67 ல் இருந்து ரூ.57.08 ஆகவும் அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.