வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 13 ஜனவரி 2017 (11:50 IST)

மாணவர்கள் போராட்டங்கள் தீவிரம் - நடக்குமா ஜல்லிக்கட்டு?

தமிழகத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. அது தொடர்பான வழக்கில், பொங்கலுக்கு முன் தீர்ப்பை கூற முடியாது உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பேரணிகளும் நடைபெற்றன. 
 
மதுரை மாவட்டம் கரிசல்குளம் பகுதில் இன்று காலை, தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட காளை அங்கு கொண்டுவரப்பட்டன. மாடு பிடி வீரர்களும் அங்கு வந்து  மாடுகளை பிடித்தனர்.  மேலும், மதுரையில் 3 எம்.எல்.ஏக்கள் ஜல்லிகட்டை நடத்த வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 

 
சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் சங்கிலி தொடர் போராட்டத்தை நடத்தினர். லயோலா கல்லூரிக்கு அருகிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதவாக மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அதில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். உடனடியாக மத்திய அரசு அவரச சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழக அரசையும், மத்திய அரசையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
 
விருதாச்சலத்தில் சுமார் 2 ஆயிரம் திமுகவினர் ஒன்று கூடி, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், சேலத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்தனர். 


 

 
மேலும், கோவை, திருநெல்வேலி என பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சிகள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டங்களை தீவிரபடுத்தியுள்ளதால் மத்திய அரசிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.