1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 29 ஆகஸ்ட் 2015 (15:37 IST)

காதலனை திருடன் என நினைத்து அடித்து உதைத்த பொதுமக்கள்

காதல் மனைவியை அழைத்துச் செல்ல வந்த வாலிபரை திருடன் என நினைத்து ஊர் பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர்.
 
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் புவனேஸ்வரன் (26) அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கணேசன் என்பவரது மகளுமான பிரியதர்ஷினி என்பவரை கடந்த 21ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 
ஆனால், மாணவி பிரிதர்ஷினியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்தன்றே தாலியை அறுத்து எரிந்து விட்டு பிரியதர்ஷினியை அழைத்து சென்று விட்டனர். பின்னர் அவரை யாருக்கும் தெரியாமல் ஓமலூர் அருகே உள்ள சக்கரை செட்டியப்பட்டி என்ற இடத்தில் உள்ள பிரியதர்ஷினியின் பாட்டி வீட்டில் தங்க வைத்திருந்தனர்.
 
இந்நிலையில், புவனேஸ்வரன் கடந்த ஒரு வார காலமாக செல்போனில் பிரியதர்ஷினியுடன் பேசி வந்துள்ளார். அதேபோல், நேற்றும், செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை அவருடைய தம்பி பார்த்து விட்டு செல்போனை பிடுங்கி கொண்டு கண்டித்துள்ளார்.
 
இதனால் அவரது தாத்தா செல்போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு பிரியதர்ஷினி பேசியுள்ளார். அப்போது, அங்கு சென்று தன்னை அழைத்து செல்லும் படியும், இல்லையேல் தான் இறந்து விடுவதாகவும் கூறி பிரியதர்ஷினி கதறி அழுதுள்ளார்.
 
இதனையடுத்து, நேற்று மாலை 5 மணிக்கு சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சக்கரை செட்டியப்பட்டி ஊராட்சி சேசியன் காடு என்ற இடத்தில் பிரியதர்ஷினி மாடுமேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அங்கு சென்ற புவனேஸ்வரன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
 
அப்போது அந்த பகுதி மக்கள் யார் என்று அவர்களிடம் விசாரிக்க வந்தபோது தனது இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்துள்ளார். இதனால் அவரை திருடன் என்று நினைத்த அந்த பகுதி பொதுமக்கள் அவரை துரத்த ஆரம்பித்தனர்.
 
5 கிலோ மீட்டர் தூரம் வயல் வழியில் ஓடிய புவனேஸ்வரன் ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100–க்கு போன் செய்து காப்பாற்றும் படி கூறியுள்ளார். இதனால் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஓமலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
 
உடனே அங்கு விரைந்த காவல் துறையினர், பொது மக்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற புவனேஸ்வரனை வாகனத்தில் ஏற்றிக்கொண்டனர். காவல்துறை வாகனத்தில் ஏறியதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருடனுக்கும் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாகவும், திருடனை காப்பாற்ற காவல் துறையினர் உதவுவதாகவும் நினைத்து, வாகனத்தை சிறை பிடித்தனர்.
 
வாகனத்தில் இருந்த காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு தகவல் கூறி விட்டு பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றிய வாலிபரை வாகனத்தில் இருந்து இறக்காமல் பார்த்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காரில் இருந்த வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்து தர்மஅடி கொடுத்தனர்.
 
இதனால் அந்த வாலிபருக்கு மூக்கு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. காவல் நிலையத்தில் இருந்து சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கூடுதல் காவல் துறையினர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
பின்னர் காயம் அடைந்த அந்த புவனேஸ்வரனை ஓமலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், காவல் துறையினர் விசாரித்த போதுதான், அவர் திருடன் இல்லை என்பதும், காதலித்து மணந்த மனைவியை அழைத்து செல்ல அவர் வந்ததும் தெரிய வந்தது.