வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2015 (14:41 IST)

கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்ற வியாபாரிகளுக்கு அபராதம்

சென்னையில் கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஹெல்மெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
 
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து ஹெல்மெட் விற்பனை அதிகரித்தது. மேலும், ஹெல்மெட் விலையும் தாறுமாறாக எகிறியது. இதனால், பொதுமக்கள் அதிர்ப்தி அடைந்தனர்.
 
இதனையடுத்து கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 3 பிரிவுகளாக தொழிலாளர் நல அதிகாரிகள் ‘ஹெல்மெட்’ கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
 
பிராட்வேயில் 13 கடைகளிலும், அண்ணாநகர், அமைந்தகரை ஆகிய இடங்களில் உள்ள கடைகளிலும், அமைந்தகரை, அண்ணாநகர், வில்லிவாக்கம், ஐ.சி.எப். பகுதியில் 15 கடைகளிலும் உள்ள ஹெல்மெட் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
 
நடைபெற்ற சோதனையில், கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
இனிமேலும் கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.