செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (14:44 IST)

நாடாளுமன்ற ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்க பாஜக அரசு முயற்சி செய்கிறது - ஜி.கே.வாசன்

நேரு அமைத்துக் கொடுத்த அடித்தளமான நாடாளுமன்ற ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்க பாஜக அரசு முயற்சி செய்கிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
 
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காந்தி நினைவு நாள் கருத்தரங்கம் தியாகராய நகரில் ‘மதசார்பற்ற இந்தியாவின் சவால்களும் அச்சுறுத்தல்களும்’ என்ற தலைப்பில் நடந்தது.
 
இந்தக்கருத்தரங்கை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் தொடங்கி வைத்தார்.
 
இந்தக் கருத்தரங்கில் ஜி.கே.வாசன் பேசியதாவது:–
 
தனி மனிதன் மதத்தை, மத நூல்களை பின்பற்றலாம். ஆனால் அரசு அரசியல் அமைப்பு சட்டத்தைதான் பின்பற்ற வேண்டும். மதம் சார்ந்து இயங்கக்கூடாது. மதம் சார்ந்த அரசாக இல்லாமல் மக்கள் நலம் சார்ந்த அரசாக இருக்க வேண்டும்.
 
மதம், இனம், மொழி என்ற பல்வேறு வேறுபாடுகளை கொண்டது நமது நாடு. ஆனால் சிந்தனை செயல் ஆகியவற்றில் இந்தியர்கள் என்ற உணர்வுடன் ஒன்றுபடுகிறோம்.
 
இந்தியாவில் 110 கோடி மக்கள் தொகை உள்ளது. அதில் 22 கோடி பேர்தான் மத சிறுபான்மையினர்களாக உள்ளனர். அவர்களை ஒதுக்கி விட்டு எப்படி வளர்ச்சி அடைய முடியும்.
 
காந்தி கற்றுத்தந்த மதசார்பின்மையை காப்பாற்ற வேண்டும். காந்தி, நேரு அமைத்துக் கொடுத்த அடித்தளமான நாடாளுமன்ற ஜனநாயகத்தை அசைத்துப் பார்க்க பாஜக அரசு முயற்சி செய்கிறது.
 
காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கு சிலை வைப்போம். கோவில் கட்டுவோம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இந்த அச்சுறுத்தும் சவால்களை நாம் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்.