வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (09:57 IST)

ஈஷா மையம் மீது மோடி நடவடிக்கை? - டெல்லி சென்ற மகள்களின் பெற்றோர்

ஈஷா யோகா மையத்தில் உள்ள தங்களது மகள்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் பிரதமரிடம் மனு அளிக்க உள்ளனர்.
 

 
பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.
 
இந்தப் புகார் குறித்து ஈஷா மையத்தில் கேட்டபோது, அந்தப் பெண்கள் விரும்பியே இங்கு தங்கியிருப்பதாகத் தெரிவித்தர். அந்தப் பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் செல்லலாம் என்றும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லை என்றும் நிர்வாகி ஒருவர் கூறி இருந்தார்.
 
இந்நிலையில், அப்பெண்களின் தாயார் சத்யவதி, ஈஷா யோகா மையத்தில் தனது 2 மகள்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில், ”லதா, கீதா ஆகியோர் இருவரும் விரும்பி சன்னியாசம் பூண்டிருந்தால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் கூறியுள்ளனர்.
 
மேலும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண்களிடம் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் புதனன்று பிற்பகல் ஈஷா யோகா மையத்திற்கு நேரில் சென்றார்.
 
அங்கு கீதா மற்றும் லதா ஆகியோரிடம் தனி அறையில் முதன்மை நீதிபதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அவர்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த விசாரணையின் அறிக்கையை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படஉள்ளது.
 
இந்நிலையில், ஈஷா யோகா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தங்களது மகள்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரியும் பிரதமரிடம் மனு அளிப்பதற்காக, காமராஜ் மற்றும் சத்யஜோதி தம்பதி தில்லிக்கு சென்றுள்ளனர்.