பாராசூட்டில் இருந்து குதித்தபோது மரத்தில் விழுந்த பெண் அதிகாரி

லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 28 மே 2015 (19:16 IST)
விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்த விமானப்படை பெண் அதிகாரி மரத்தின் மீது மோதியதில் காயமடைந்துள்ளார்.
கிழக்கு தாம்பரம், வேளச்சேரி மெயின்ரோட்டில் விமானப்படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு போர் விமானம் ஓட்டுதல், விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்தல் மற்றும் அவசர காலங்களில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தினமும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று புதன் கிழமை (27) விமானப்படை பெண் அதிகாரி மோகனசந்திரிகா உள்பட 20க்கும் மேற்பட்டோர் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர். அனைவரும் திட்ட மிட்டபடி விமானப்படை தளத்துக்குள் இறங்கினர்.

கடைசியாக குறிப்பிட்ட உயரத்தில் விமானத்தில் இருந்து மோகனசந்திரிகா பாராசூட்டில் குதித்தார். அந்த நேரத்தில் காற்று பலமாக வீசியதால் அவரால் விமானப்படை தளத்துக்குள் இறங்க முடியவில்லை. காற்றின் போக்கில் அருகில் உள்ள ஆதிநகர் குடியிருப்பின் மேற்பகுதியில் பறந்தார்.

சுதாரித்துக் கொண்ட அவர் தரையில் இறங்க முயன்றபோது அங்கு நின்ற வேப்ப மரத்தின் கிளையில் பாராசூட் சிக்கியது.இதனால் மோகன சந்திரிகா செய்வது அறியாமல் அந்தரத்தில் தொங்கியபடி கூச்சலிட்டார். அவரது இடதுகால் அருகில் சென்ற மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து மயங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இந்த தகவலை அறிந்த சில நிமிடத்திலேயே விமானப்படையின் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 5 வண்டிகளில் அங்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி மரத்தில் சிக்கி இருந்த மோகன சந்திரிகாவை பாராசூட்டில் இருந்து விடுவித்து கீழே இறக்கினர். மயக்க நிலையில் இருந்த அவரை உடனடியாக பரங்கி மலையில் உள்ள விமானப் படைமருத்துவமனையில் சேர்த்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :