வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 6 ஜூலை 2015 (13:52 IST)

ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பள்ளிகொண்டா பவித்ரா நீதிபதி முன்னிலையில் ஆஜர்

காணாமல்போன பள்ளிகொண்டா பவித்ரா சென்னை அம்பத்தூரில் மகளிர் விடுதியில் மீட்கப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு பின்னர் வேலூர் ஜேஎம் 1-வது மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
 

 
பள்ளிகொண்டா பகுதியை அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி (37). இவரது மனைவி பவித்ரா (24). இவர்களுக்கு ரிஷிதா (5) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த மே மாதம் 24 ஆம் தேதி பவித்ராவை காணவில்லை என அவரது கணவர் பழனி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது (27) என்பவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
 
அப்போது அவர் போலீசார் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது. இதனால் ஆம்பூரில் ஜூன் 27 ஆம் தேதி கலவரம் மூண்டது. ஷமீல் அகமது உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
 
இந்நிலையில், பவித்ராவை கண்டுபிடித்து தரும்படி அவரது கணவர் பழனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து, பவித்ரா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேலூர் எஸ்பி செந்தில்குமாரி உத்தரவிட்டார்.
 
தனிப்படை போலீசார், ஷமீல் அகமது ஈரோட்டில் கடைசியாக தங்கியிருந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின்னர், பவித்ரா செல்போன் எண்ணைக் கொண்டு தேடியதில் அவர் ஆம்பூரைச் சேர்ந்த சிவக்குமார், அரக்கோணத்தைச் சேர்ந்த சரவணன், சென்னை கிண்டியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோருடன் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது.
 
அவர்களை பிடித்து விசாரித்தபோது, சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் பவித்ரா இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னை போலீஸ் உதவியுடன், வேலூர் தனிப்படை போலீசார் அங்கு சென்று பவித்ராவை நேற்று முன்தினம் இரவு மீட்டனர். பின்னர், வேலூர் அழைத்து வரப்பட்ட பவித்ராவிடம் எஸ்பி செந்தில்குமாரி, கூடுதல் எஸ்பி அசோக்குமார், டிஎஸ்பி கணேசன், ஆய்வாளர்கள் பார்த்தசாரதி (ராணிப்பேட்டை), கோவிந்தசாமி (வேப்பங்குப்பம்), சரவணன் (ஆம்பூர் டவுன்) ஆகியோர் விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் பவித்ரா கூறிய தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
 
தன்னைவிட 13 வயது அதிகமாக இருந்த பழனியுடன் வாழ விருப்பமில்லாததால், தன்னுடன் ஷூ கம்பெனியில் வேலை செய்த ஷமீல் அகமதுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது தெரிந்த பழனி கண்டித்ததால், ஷமீல் அகமதுவை தேடி ஈரோட்டுக்கு சென்றுள்ளார். அவர் பவித்ராவை ஏற்காமல் நிராகரித்து, மீண்டும் கணவர் வீட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளார். அங்கு செல்ல விருப்பமில்லாமல் ஆம்பூர் சிவக்குமார் உதவியை நாடினார். அவர் மூலம் பழக்கமான அரக்கோணம் சரவணன், சென்னை சுரேஷ் மூலம் சென்னை அம்பத்தூரில் மகளிர் விடுதியில் தங்கியிருந்து, கார்மென்ட்ஸ் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். தன்னால் ஏற்பட்ட பிரச்சனையால் ஆம்பூர் கலவரம் மூண்டதை எண்ணி வேதனை அடைந்ததாக தெரிவித்தார்.
 
இவ்வாறு போலீசார் கூறினர்.
 
இதைத்தொடர்ந்து, பவித்ரா வேலூர் ஜே.எம் 1-வது மாஜிஸ்திரேட் இல்லத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து வேலூரில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட பவித்ரா, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
 
ஷமீல் அகமதுவின் பெற்றோர், உறவினர்கள், அவரை தாக்கிய சம்பவத்தின்போது உடனிருந்த காவலர்கள், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த டாக்டர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். வழக்கின் முக்கிய நபரான ஆய்வாளர் மார்ட்டீன் பிரேம்ராஜ் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது வீட்டுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மார்ட்டீன் பிரேம்ராஜ் இன்று சிபிசிஐடி முன்பு ஆஜராக உள்ளதாக தெரிகிறது.