வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 28 மே 2016 (16:05 IST)

தமிழகம் கைவிரிப்பு - மகாராஷ்டிராவில் போட்டியிடும் ப.சிதம்பரம்

காலியான நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களை நிரப்புவதற்காக, மஹாராஷ்டிராவில் ப.சிதம்பரம் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.


 

வங்கி கடன் மோசடி விவகாரத்தில், பதவியை ராஜினாமா செய்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, காங்கிரசின் ஆஸ்கர் பெர்னாண்டஸ், பாஜகவின் வெங்கையா நாயுடு ஆகியோரையும் சேர்த்து 57 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக் காலம் ஜூன் மாதத்தில் முடிவடைகிறது.
 
இதையடுத்து இன்று மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, விவேக் தன்கா, கபில்சிபல், சயா வர்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். கர்நாடகாவில் இருந்து ஜெய்ராம் ரமேஷும், உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து கபில் சிபலும் போட்டியிடுகின்றனர்.
 
ஒரு எம்.பியை தேர்ந்தெடுக்க 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையுள்ள பட்சத்தில், தமிழகத்தில் காங்கிரசுக்கு 8 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்த திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரது பெயர்களை அறிவித்து விட்டது.
 
இதனால், ப.சிதம்பரம் மஹாராஷ்டிராவில் இருந்து போட்டியிட உள்ளார். ப.சிதம்பரம் வேறு மாநிலத்தில் இருந்து போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தரப்பில் ஒரு சிலர் எதிர்ப்புத் தெருவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.