1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 3 டிசம்பர் 2016 (15:48 IST)

மோடி சொல்லிய 50 நாட்களில் 20 முடிந்து விட்டது - திருநாவுக்கரசர் தாக்கு

பிரதமர் மோடி 50 நாளென்று சொல்லியே 20 நாட்களுக்கு மேலாகி விட்டது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.


 

திருவண்ணாமலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய திருநாவுக்கரசர், ”பிரதமர் மோடி அவசரக் கோலத்தில் முன்னெச்சரிக்கை இல்லாமல் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்துவிட்டார். இதனால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

தினம் தினம் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மேலும் மேலும் சிரப்படுகின்றனர். இந்தப் பிரச்னை குறித்து பிரதமர் மோடி, நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், பிரதமர் மோடி, யாரையும் மதிக்கவில்லை.

பணப் பிரச்சனை 50 நாளில் தீர்ந்துவிடும் என்று மோடி சொல்கிறார். நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தில் ரூ. 17 லட்சம் கோடி 84  சதவீதம் 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக உள்ளன. புதிய பணத்தை ஒரு மாதத்துக்கு 300 கோடி வரை தான் அச்சடிக்க முடியும்.

அப்படியானால், 17 லட்சம் கோடி பணத்தை புதிதாக அச்சடிக்க 7 முதல் 8 மாதங்கள் ஆகும். பிரதமர் மோடி 50 நாளென்று சொல்லியே 20 நாட்களுக்கு மேலாகி விட்டது.

இப்போது, வங்கிகள் முன்பும், ஏடிஎம் மையங்கள் முன்பும் முதியோர்கள், கர்ப்பிணிகள் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்படுகின்றனர். இவர்களுக்காக தனி கவுண்டர்களை வங்கிகளில் திறக்க வேண்டும். பொதுமக்களை கடுமையான பாதிப்பிற்குள்ளாக்கிய  பிரதமர் மோடிக்கு தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் பாடம் கற்பிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.