Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓபிஎஸ் ராஜினாமா செல்லாது?: ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் குளறுபடி!

ஓபிஎஸ் ராஜினாமா செல்லாது?: ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் குளறுபடி!


Caston| Last Updated: திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:12 IST)
தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5-ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியதாக தகவல் வந்தது. இதனை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் மீண்டும் நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது.

 
 
5-ஆம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்த முதல்வர் பன்னீர்செல்வம் 7-ஆம் தேதி தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் வாங்குவதாக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார் ஓபிஎஸ்.
 
முதல்வர் ஓபிஎஸ் ராஜினாமா கடிதம் கொடுத்தபோது ஆளுநர் மும்பையில் இருந்துள்ளார். இதனால் சசிகலா தரப்பினர் முதல்வர் ஓபிஎஸின் ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் அனுப்பி விட்டு ஒரிஜினலை ஆளுநர் அலுவலக அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.


 
 
அதன் பின்னர் ஊட்டிக்கு வந்த ஆளுநரை தொடர்பு கொண்டு ராஜினாமா தகவலை தெரிவித்து அவரிடம் இருந்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக கடிதம் கேட்டுள்ளனர் அதிகாரிகள். ஆளுநரும் ஊட்டியில் இருந்தபடியே ராஜினாமா ஏற்பு கடிதம் வழங்க, ஆளுநரின் முதன்மை செயலர் ரமேஷ் சந்த் மீனாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
பல சர்ச்சைகளுக்கு பின்னர் சென்னைக்கு வந்த ஆளுநர், சீலிட்ட கவரில் இருந்த முதல்வர் ஓபிஎஸின் ராஜினாமா கடிதத்தை பிரித்து பார்த்த போது, பன்னீர்செல்வத்தின் கையெழுத்தில் மாற்றம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
முதல்வரின் கையெழுத்தின் அருகே பிற்பகல் 1:41 மணி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு கையெழுத்துடன் நேரம் குறிப்பிடும் பழக்கம் இல்லை என பன்னீர்செல்வம் ஆளுநரிடம் விளக்கம் அளித்ததாகவும், அதனால் ராஜினாமா கடிதமாக அதனை ஏற்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
 
மேலும் இந்திய அரசியல் சட்டத்தின்படி முதல்வர் ராஜினாமா கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விதி உள்ளது. இதனால் பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதமே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :