ஆதரவாளர்களுடன் கிளம்பிய ஓ.பி.எஸ் ; டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து


Murugan| Last Modified வியாழன், 12 அக்டோபர் 2017 (11:07 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில் தனக்கு பெரிய அங்கீகாரம் இல்லை என பிரதமரிடம் முறையிடவே துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

 

 
துணை முதல்வர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொடுக்கப்பட்டவுடன், தர்ம யுத்தத்தை ரத்து செய்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி அணியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். ஆனால், கட்சி மற்றும் ஆட்சி இரண்டிலுமே அவருக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
 
அதோடு, அவரின் ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்டோருக்கு கூட கொடுப்பதாக கூறப்பட்ட பதவிகள் இன்னும் தரப்படவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
 
மேலும், தலைமை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் முதல் நிர்வாகிகள் வரை யாரும் தன்னை பெரிதாக கண்டு கொள்வதில்லை என ஓ.பி.எஸ் தனது சகாக்களிடம் புலம்பி வருகிறாராம். ஏற்கனவே இது தொடர்பாக ஓ.பி.எஸ் டெல்லியில் பேசியுள்ளார். அதையடுத்து, அரசு விழாக்களில் ஓ.பி.எஸ்-றிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும், பல விவகாரங்களில் ஓ.பி.எஸ்-ஐ ஒதுக்கி விட்டு, தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்தி வருகிறார் எடப்பாடி.
 
இதனால் அதிருப்தியடைந்த ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி மற்றும் மைத்ரேயன் உள்ளிட்டோரோடு நேற்று டெல்லி சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் இன்று பிரதமரை சந்தித்து தாங்கள் ஒதுக்கப்படுவது குறித்து முறையிடுகிறார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :