1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (11:08 IST)

’ஜக்கி வாசுதேவ் சொன்னால் தான் திருமணம்’ - அடம்பிடிக்கும் மகளால் பெற்றோர் கண்ணீர்

மூளைச் சலவை செய்து, அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களின் மகளை, ஈஷா மையத்திலிருந்து மீட்டுத்தர வேண்டுமென, மற்றுமொரு வயதான பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 
கோவை கே.கே. புதூர் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
 
இவர்களில் இளைய மகள் அபர்ணாவைத்தான், ஈஷா யோகா மையத்தினர் மூளைச் சலவை செய்து இழுத்துக் கொண்டிருப்பதாகவும், அவர்களிடம் இருந்து அபர்ணாவை மீட்டுத்தர வேண்டும் என்றும் அந்த பெற்றோர் கதறிக் கொண்டிருக்கின்றனர்.
 
செய்தியாளர்கள் மத்தியில் கூறிய அவர்கள், ”இன்ஜினியரிங் படித்துள்ள எங்களது இளைய மகள் அபர்ணா, ஜெர்மன் நாட்டில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் பயிற்சி பெற்று, அந்நிறுவனத்தின் பெங்களூரு கிளையில், மாதம் லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்தார்.
 
அப்போது, ஈஷா யோகா மையத்துடன் தொடர்பு ஏற்பட்டு யோகா பயிற்சிக்கு சென்றார். அங்கு ஈஷா மையத்தினர் அவரை மூளைச் சலவை செய்துவிட்டனர். இதன் பின்னர் தங்கள் மகளின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, தற்போது ஈஷாவின் தூண்டுதலால், தான் பார்த்த வேலையையும் விட்டு விட்டார்.
 
தற்போது, ஈஷா யோகா மையத்தில் உள்ள திருமண மையத்தின் மூலம், திருமணம் செய்து கொண்டு ஆசிரமத்திலேயே தங்கிவிடுமாறு அவரை நிர்பந்தப்படுத்தி வருகின்றனர்.
 
அதேநேரம், திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள கூடாது என்றும் ஈஷா திருமண மையத்தினர் கூறி இருப்பதாக தெரிகிறது.
 
திருமணம் தொடர்பாக நாங்கள் பேச்செடுக்கும் போதெல்லாம், சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்படிதான் செய்வேன் என்று கூறும் எங்களது மகள், அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் வீட்டை விட்டே போய்விடுவேன் என்றும் மிரட்டுகிறார்.
 
ஈஷா மையத்தினர் எங்களது மகளை மூளைச் சலவை செய்து இருப்பதாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தோம்; ஆனால், அங்குள்ள காவல் அதிகாரிகள் உங்கள் மகளை நீங்கள் ஒழுங்காக பார்த்துக் கொள்ளாமல் எங்களிடம் ஏன் வருகிறீர்கள் என்று எங்களை திட்டி திருப்பி அனுப்பி விட்டனர்.
 
இதுவரை எந்த ஒரு விசாரணையையும் காவல்துறையினர் மேற்கொள்ளவில்லை. அடுத்ததாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளோம்” என்று கூறினர்.