ரகசியமாக வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் வாக்குமூலம் பெற்ற அதிகாரிகள்!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (07:45 IST)
நீதிமன்ற உத்தரவின் பேரில், கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை சசிகலா அளித்திருந்தாலும், உடனடியாக அவரை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்கவில்லை. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஓ.பன்னீர்செல்வம் பக்கம் 5 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள் வந்துள்ளனர்.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் மாமல்லபுரம் அருகே கூவத்தூரிலுள்ள கோல்டன் பே ரெஸார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டாயப்படுத்தி அங்கே தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக சம்பந்தப் பட்ட பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதையடுத்து, சனிக்கிழமை (பிப்.11) அன்று கூவத்தூர் விடுதிக்கு சென்று, அங்கிருந்த எம்.எல்.ஏ.க்களிடம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அங்கு ஏழு அமைச்சர்கள் உள்பட 94 எம்.எல்.ஏ.க்கள் இருந்துள்ளனர். நீண்டநேரம் நடந்த இந்த விசாரணையின்போது, எம்.எல்.ஏ.க்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவையடுத்து கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளோம். 13-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்’ என்றார்.

இது குறித்து வட்டாட்சியர் ராமச்சந்திரன் கூறுகையில், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப் பட்டது. சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருப்பதாகவும், யாரும் கடத்தப்படவில்லை எனவும் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்ததாக கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :