வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (11:53 IST)

தமிழ்நாட்டில் மதுபானக்கடைகள் எப்படி இயங்குகின்றன? - நேரில் பார்வையிட ஒடிசா அதிகாரிகள் சென்னை வருகை!

தமிழ்நாட்டில் ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகள் எப்படி இயங்குகின்றன? என்பதை பார்வையிடுவதற்காக ஒடிசா மாநில அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர்.
தமிழ்நாட்டில் தற்போது 6 ஆயிரத்து 823 ‘டாஸ்மாக்’ கடைகள் மூலம் அரசே பல்வேறு வகையான மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது.
 
கடந்த ஆண்டு, ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகள் மூலம், அரசுக்கு ரூ.21 ஆயிரத்து 641 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 20 ஆம் தேதி முதல் ஆயத்தீர்வு எதிரொலி காரணமாக ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களின் விலை உயர்ந்தது.
 
இதன்மூலம் அரசுக்கு மேலும், ரூ.3 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் எவ்வாறு ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகள் இயக்குகிறார்கள்?.
 
எந்த முறையில் மதுபான பாட்டில்களை கொள்முதல் செய்கிறார்கள்? எத்தனை விதமான மதுபான ரகங்களை விற்பனை செய்கிறார்கள்? அந்த மதுபானங்களை கடைகளில் எப்படி விநியோகம் செய்கிறார்கள்? எவ்வளவு நேரம்? எந்த வகையில் விற்பனை செய்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒடிசா மாநிலத்தில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் குழு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
 
சென்னையில் நேற்று இந்த குழு சில கடைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகளுக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் பார்களில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் பார்வையிட்டனர்.
 
பின்னர், மதுபானங்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களிடமும் அவர்கள் ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகள் குறித்து கேட்டறிந்தனர். அதன்பிறகு, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக தலைமை அலுவகத்திற்கு சென்றனர்.
 
அங்கிருந்த தமிழ்நாடு மாநில வாணிபக்கழக இணை மேலாண்மை இயக்குனர் மோகன் மற்றும் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.