வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 10 டிசம்பர் 2014 (13:22 IST)

அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம்: அருண் ஜேட்லிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

கேபிள் தொலைக்காட்சிக்கு டிஜிட்டல் உரிமத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய நிதி, செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தை மக்களவைத் துணைத் தலைவர் எம்.தம்பிதுரை, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் அருண் ஜேட்லியிடம் அளித்தனர்.
 
 
அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதாவது:-
 
சென்னை பெருநகர்ப் பகுதிக்கான டிஜிட்டல் உரிமம் வழங்குமாறு கடந்த 2012 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 5 ஆம் தேதியும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு உரிமம் கோரி அதே ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதியும் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறைக்கு தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் விண்ணப்பித்தது.
 
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் விண்ணப்பங்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அதேசமயம், முந்தைய மத்திய அரசின் செய்தி, ஒலிபரப்பு அமைச்சகம் தமிழ்நாட்டில் உள்ள மற்ற 9 தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 
 
இந்த நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் விண்ணப்பித்ததற்கு பிறகே உரிமம் கோரி விண்ணப்பித்தவை என்பதும் தெரியவந்துள்ளது.
 
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு தொடர்ந்து பலமுறை அப்போதைய செய்தி, ஒலிபரப்பு அமைச்சர்களையும் முன்னாள் பிரதமரையும் சந்தித்ததோடு, குறிப்பிட்ட காலவரையறைக்குள் டிஜிட்டல் முறைக்கு மாற வசதியாக டிஜிட்டல் உரிமத்தை விரைந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கும் நடைமுறை தொடர்ந்து நீடிக்கலாம் என்றும், டிஜிட்டல் உரிமம் வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
 
இது தொடர்பாக, அப்போதைய பிரதமருக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், டிஜிட்டல் உரிமத்தை வழங்கும்படி செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி இருந்தார். அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட பின்னரும், மத்திய அரசு இன்னும் டிஜிட்டல் உரிமத்தை வழங்கவில்லை.
 
உரிமம் வழங்கும் பிரச்னை குறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளை அளிக்க அமைச்சகளுக்கு இடையிலான குழு ஒன்றை அமைத்து கடந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை இதுவரை அளிக்கவில்லை.
 
1995ஆம் ஆண்டு கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறை சட்டத்தின்படியும் அதன் கீழான விதிகளின்படியும், தனிநபரோ அல்லது ஒரு சங்கமோ அல்லது கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனியோ டிஜிட்டல் உரிமம் பெற தகுதி கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அந்த வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் உரிமம் பெறுவதற்கான முழுத் தகுதியும் பெற்றுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, குறிப்பிட்ட காலத்துக்குள் மற்ற நிறுவனங்களுக்கு இந்த உரிமங்களை வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்துக்கு உரிமத்தை வழங்காதது, குறிப்பிட்ட தனியார் வர்த்தக நலன்களைப் பாதுகாப்பதற்காகத்தான் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
 
எனவே, இந்த விவகாரத்தில் உடனடி முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மத்திய அமைச்சரவையின் இணையதளத்தில், எங்களது கோரிக்கை பரிசீலனையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் 2 ஆண்டுகளாக முடிவு மேற்கொள்ளாமல் இருப்பது மிகவும் தாமதமாகிறது என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
 
இந்தக் கோரிக்கையை விரைவில் பரிசீலனை செய்து, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்துக்கு மேலும் தாமதமின்றி டிஜிட்டல் உரிமத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
 
இதன்மூலம் தமிழக மக்கள், குறிப்பாக, ஏழை, நடுத்தர வகுப்பினர் குறைந்த செலவில் தரமான கேபிள் டி.வி. சேவைகளைப் பெற வழிவகை ஏற்படும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.