வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 24 அக்டோபர் 2014 (10:56 IST)

வடகிழக்குப் பருவமழை தீவிரம்: தமிழக அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாநிலத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
 
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
இதனால், மாநிலத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தமிழக எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 650 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
 
அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதாலும், காவிரி டெல்டா பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதமே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
 
கடந்த 20 ஆம் தேதி 88 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 91.14 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த உயரம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.
 
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து இருப்பதால், 142 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.8 அடியாகவும், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 48.2 அடியாகவும் உயர்ந்துள்ளது.
 
பெரியாறு அணைக்கு வினாடிக்கு 2,658 கனஅடி தண்ணீரும், வைகை அணைக்கு வினாடிக்கு 3,766 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
 
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையும், 126 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையும் ஏற்கனவே நிரம்பி விட்டதால், அந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மேலும் அம்மாவட்டத்தில் உள்ள பாலாறு, பரப்பலாறு, குதிரையாறு உள்ளிட்ட அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
 
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, ராமநதி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்புகின்றன.
 
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 95.4 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 111.15 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 72.75 அடியாகவும், கடனா நதியின் நீர்மட்டம் 81.8 அடியாகவும், ராமநதியின் நீர்மட்டம் 73.5 அடியாகவும், கருப்பாநதியின் நீர்மட்டம் 64.31 அடியாகவும், அடவி நயினார் கோவில் அணையின் நீர்மட்டம் 115 அடியாகவும் உயர்ந்துள்ளது.
 
குமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 37.55 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 66.75 அடியாகவும் அதிகரித்து இருக்கிறது.
 
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50.4 அடியாகவும், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 72.55 அடியாகவும் உயர்ந்து உள்ளது.
 
கோவை மாவட்டம் சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, சிறுவாணி அணைகள் நிரம்பிவிட்டன. பவானிசாகர் அணையில் 95.4 அடியும், அமராவதி அணையில் 79.3 அடியும், திருமூர்த்தி அணையில் 41.5 அடியும் தண்ணீர் உள்ளது.
 
ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் தனது முழு அளவான 42 அடியை எட்டிவிட்டதால் உபரிநீர் வெளியேறுகிறது.
 
இதன் காரணமாகவும், பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாலும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
 
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 210 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 60 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
 
பூண்டி ஏரியில் 220 மில்லியன் கனஅடியும், செங்குன்றம் ஏரியில் 880 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,069 மில்லியன் கனஅடியும் நீர் இருப்பு உள்ளது.
 
தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மழை பெய்யத்தொடங்கி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
எனினும், தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பல ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.