வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 1 நவம்பர் 2014 (14:14 IST)

சென்னையில் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது - தொழிலாளர்கள் வீடு திரும்பினர்

இன்று சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மூடப்பட்டது. நோக்கியா ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
 
முன்னதாக நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 720 கோடி டாலர் கொடுத்து வாங்கியிருந்தது. அதன்பின் வரி பிரச்சினை காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மைக்ரோசாப்ட் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்திருந்தது. கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரி பாக்கி தொடர்பாக நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. 
 
பின்லாந்து நாட்டை சேர்ந்த இந்த தொழிற்சாலை 50 கோடி டாலர் முதலீட்டில் 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த  தொழிற்சாலையில் 8 ஆயிரம் பேர் நேரடியாகவும், 12 ஆயிரம் பேர்  மறைமுகமாகவும் பணிபுரிந்து வந்தனர்.
 
மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் கடந்த மே மாதம் தொழிலாளர் விருப்ப ஓய்வு பெறும்போது வழங்கப்பட்ட தொகையை விட இரண்டு லட்சம் ரூபாய் கூடுதலாக தர நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
 
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு 6 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் இதற்கு சம்மதிக்காததால் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.