வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 4 ஜூன் 2016 (18:27 IST)

கருணாநிதியை யாரும் ’நூறாண்டு வாழ்க’ என்று வாழ்த்த வேண்டாம் - போட்டு தாக்கும் வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதியை யாரும் நூறாண்டு வாழ்க என்று வாழ்த்த வேண்டாம். அதற்கு இன்னும் 7 ஆண்டுகள் தான் இருக்கிறது. எனவே, நீங்கள் விரும்பும் வரை வாழுங்கள் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
 

 
திமுக தலைவர் கலைஞரின் 93ஆவது பிறந்தநாள் தமிழகம் எங்கும் கட்சி தொண்டர்களாலும், நிர்வாகிகளாலும், தலைவர்களாலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
 
கூட்டத்தில் பங்கேற்று பேசிய கவிஞர் வைரமுத்து, ”கலைஞரை பார்த்து எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. நான் சில நிமிடங்கள் சில செய்திகளை கூறியாக வேண்டும். தமிழ்நாட்டில் சொல்பவன் வேறு, செய்பவன் வேறு. சொல்லிச் சென்றவன் என்றால் பித்தளை விற்பவன். சொல்லிச் செய்பவன் என்றால் தங்கம் விற்பவன். 
 
அடுத்த நூற்றாண்டில் இப்படி ஒரு மனிதர் எலும்பும், சதையுமாக நடமாடினார் என்பதை நாடு நம்பாது. கலைஞரின் 45ஆவது பிறந்த நாளில் அண்ணா பேசும்போது, அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றாலும், தண்டவாளத்தில் தலைவை என்றாலும், இரண்டையும் ஒன்றாக கருதுவான் தம்பி என்று பாராட்டி கூறினார். 
 
எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் கொடிகட்டி பறக்கும் தலைவர் கலைஞர் தான். வார்த்தைக்கு மத்தியில் சிந்திப்பவர் கலைஞர். திமுக தேர்தல் அறிக்கையில் முக்கியமான அறிவிப்பு எது என்றால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு என்பது தான். 
 
மது வந்ததால், தமிழ்நாட்டில் மனிதம் ஒழிந்தது. தமிழ்நாட்டில் 58 சதவீதம் பேர் குடிக்கிறார்கள். மதுவினால் 20 லட்சம் விதவைகள் இந்த மண்ணில் இருக்கிறார்கள்.
 
நல்லவேளை வங்காள விரிகுடா மதுவாக இல்லை. இருந்திருந்தால் குடித்து தீர்த்திருப்பார்கள். மதுவிலக்கு வந்தால் தான் இந்தியாவின் முன்னோட்ட மாநிலமாக தமிழகத்தை எடுத்து செல்ல முடியும். இதுவே தமிழ் சமுதாயத்தின் முதல் கடமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். 
 
வாஜ்பாயைவிட கலைஞர் 6 மாதம் மூத்தவர். அவர் களத்தில் இல்லை. கலைஞர் இன்னும் களத்தில் இருக்கிறார். நீங்கள் பல்லாண்டு வாழ்க. அவரை யாரும் நூறாண்டு வாழ்க என்று வாழ்த்த வேண்டாம். அதற்கு இன்னும் 7 ஆண்டுகள் தான் இருக்கிறது. எனவே, நீங்கள் விரும்பும் வரை வாழுங்கள்’’ என்று கூறியுள்ளார்.