வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2017 (13:08 IST)

முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் அணி பேரம் பேசியதா?: என்ன சொல்கிறார் மாஃபா பாண்டியராஜன்!

முதல்வர் பதவிக்கு ஓபிஎஸ் அணி பேரம் பேசியதா?: என்ன சொல்கிறார் மாஃபா பாண்டியராஜன்!

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி அல்லது பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என எந்த பேரமும் பேசவில்லை என அந்த அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.


 
 
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இரு அணியினரும் கூறியுள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தை இன்னமும் ஆரம்பிக்காமல் நிபந்தனைகளைத்தான் வைத்து வருகின்றனர்.
 
இந்த பேச்சுவார்த்தை இன்னமும் ஆரம்பிக்காமல் இருப்பதற்கு காரணம் ஓபிஎஸ் அணியினர், முதல்வர் பதவி, பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்டவையை கேட்பதாலேயே தடையாக உள்ளதாக செய்திகள் கசிகின்றன.
 
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன், இரண்டு அணிகளும் இணைவது தொடர்பாக, எங்கள் அணி சார்பில் மிகத் தெளிவாக மூன்று நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளன. சசிகலாவையும், அவரது குடும்ப உறுப்பினர்களையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும், அம்மாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும், தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிராமணப் பத்திரங்களை திரும்பப் பெற வேண்டும்.
 
இந்த நிபந்தனைகளை ஏற்றால்தான் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளோம். மேலும் ஓபிஎஸ் முதல்வர் பதவியோ அல்லது பொதுச்செயலாளர் பதவியோ கேட்டு நாங்கள் யாரும் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ எந்தவிதப் பேரமும் பேசவில்லை. எங்களுக்கு அதற்கான அவசியமும் எழவில்லை. மக்கள்தான் சிறந்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.