வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 25 மே 2015 (11:32 IST)

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாகவே சந்திப்போம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

 
பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்க பிரச்சார நிகழ்ச்சி கோவையில் இன்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, மத்திய அரசின் சாதனைகள் அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை வினியோகித்தார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மதுவை பரவலாக்கி விட்டது. பெருகி வரும் மதுவால், ஏழை, எளிய குடும்பங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான் குடும்பங்கள் உயிரிழப்பையும், லட்சக்கணக்கானோர் உடல்நிலையில் பெரும் பாதிப்பையும் சந்தித்து வருகின்றனர்.
 
தமிழகத்தில் இந்த நிலை மாற வேண்டும் என நினைக்கும் மக்கள், மதுவற்ற தமிழகத்தை உருவாக்கும் விதத்தில் நல்ல முடிவை எடுப்பார்கள். மதுவற்ற தமிழகத்தை உருவாக்கும் முடிவில் பாஜக தெளிவாக இருக்கிறது. 2016ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் வெல்லும். அப்போது மதுவற்ற தமிழகம் அமையும்.
 
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் வலுவாக இருந்து கொண்டிருக்கிறோம். இந்த கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. அதற்குள் எங்கள் கூட்டணியில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை அறிந்து, ஒருமித்த சிந்தனையை ஏற்படுத்தி, தேர்தலை சந்திப்போம். இந்தத் தேர்தலில் ஒரு நபர் முன்னிலைப்படுத்தப்படலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால், தேர்தலை இணைந்து சந்திப்பது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
 
மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு எதிரானவையாக இருப்பதாக திட்டமிட்டு தவறான பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. உண்மையில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் திட்டம். கிராமங்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டுக்கும் நன்மை பயக்கும் திட்டம்.
 
நாட்டின் பாதுகாப்புக்கு துறைக்கு தேவையான ஆயுதங்கள் இந்தியாவிலே தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லைப்பகுதியில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் போடப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு பாஜக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது'' என்றார்.