வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (07:47 IST)

ஒரு நபர் விசாரணைக் குழு முன் ஆஜராக கருணாநிதிக்கு விலக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

புதிய தலைமைச் செயலகக் கட்டடம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை குழு முன் ஆஜராக திமுக தலைவர் கருணாநிதிக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

“நான் முதலமைச்சராக இருந்தபோது, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டேன்.

அதைத் தொடர்ந்து 7 அடுக்கு மாடிக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 2010 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும், தற்போது செயல்படும் தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு அதன் அலுவலகத்தை இடம் மாற்றம் செய்தது.

இதன் பிறகு, புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதற்கும் 2011 ஆம் ஆண்டு முடிவு செயய்ப்பட்டது.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி, அதை விசாரணை செய்ய நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் குழுவை நியமித்து 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக நீதிபதி தங்கராஜ் அந்தப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். அவருக்குப் பதிலாக நீதிபதி ஆர்.ரகுபதியை நியமித்து 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

ஒரு நபர் குழுவின் தலைவராக நீதிபதி தங்கராஜ் இருந்தபோது எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. நீதிபதி ஆர்.ரகுபதி ஒரு நபர் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 2 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாகவே அவ்வாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு செப்டம்பர் 11 ஆம் தேதி மீண்டும் சம்மன் அனுப்பபட்டது. தற்போது, செப்டம்பர் 18 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஒரு நபர் குழு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

எனவே, ஒரு நபர் குழுவை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும். மேலும், நேரில் ஆஜராகுமாறு பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்“ இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜரானார்.

அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, மூத்த வழக்குரைஞர் முத்துக்குமாரசாமி ஆகியோர் ஆஜராகி, ஒரு நபர் குழு முன்பு மனுதாரர் ஆஜராகத் தேவையில்லை.

அவருக்குப் பதிலாக, அவரது வழக்குரைஞர் ஆஜராகி வினாத் தாள்களைப் பெற்றுக் கொள்ளலாம். மனுதாரர் அதை நிரப்பிக் கொடுத்தால் போதும் என தெரிவித்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி மனுதாரர் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும், இரண்டு வாரங்களுக்குள் மனுவுக்கு பதில் அளிக்க ஒரு நபர் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.