வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 31 ஜனவரி 2015 (12:56 IST)

தாய்மொழி வழிக்கல்வியை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்

கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதைப்போல, தாய்மொழி வழிக்கல்வியை தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
கர்நாடகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கன்னடத்தை பயிற்று மொழியாக்குவதற்காக கல்வி பெறும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான மசோதா நாளை மறுநாள் தொடங்கும் கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
 
தாய்மொழி வழிக்கல்வியை உறுதி செய்வதற்கான கர்நாடக அரசின் இந்நடவடிக்கை பாராட்டத்தக்கது. கர்நாடகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கன்னடமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கடந்த 1994ஆம் ஆண்டு அம்மாநில அரசு ஆணை பிறப்பித்தது.
 
இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கன்னட பயிற்று மொழி ஆணை கருத்துரிமைக்கு எதிரானது என்று கூறி ரத்து செய்து விட்டன. ஆனாலும், அத்தீர்ப்பில் விளக்கம் கோரும் மனுவை தாக்கல் செய்த கர்நாடக அரசு கன்னடத்தையே தொடர்ந்து பயிற்று மொழியாக கடை பிடித்து வருகிறது. இதற்கு சட்டப்பாதுகாப்பு பெறும் நோக்கத்துடன் தான் சட்டத்திருத்தம் செய்ய கர்நாடக அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.
 
மத்திய அரசு சட்டமான கல்வி பெறும் உரிமை சட்டத்தின் 29 (எஃப்) பிரிவில் இடம் பெற்றுள்ள, “நடைமுறைக்கு சாத்தியமான வரையில் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்” என்ற வாசகத்தில் நடைமுறைக்கு சாத்தியமாகும் வகையில் என்ற சொற்களை நீக்குவதன் மூலம் தாய்மொழியை, அதாவது கன்னடம் பயிற்று மொழியாகிவிடும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.
 
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் போதிலும், தாய்மொழி வழிக்கல்வியை உறுதி செய்வதில் தீவிரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை தமிழகத்தில் தான் நிலவுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும். தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 25 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.
 
இதற்காக சட்டம் கொண்டுவர வலியுறுத்தி கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்த அப்போதைய கலைஞர் அரசு அதன்பின் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டது. தமிழை கட்டாயப்பாடமாக்குவதற்காக மட்டும் அரசாணை பிறப்பித்த அரசு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுமொழி என்ற கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.
 
அதுமட்டுமின்றி, முந்தைய திமுக ஆட்சியின் போது சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை வலிந்து திணிக்கப்பட்டது. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் போராட்டம் நடத்திய போது, தமிழ்நாட்டில் 2122 பள்ளிகளில் மட்டும் தான் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது.
 
ஆனால், இன்றோ தமிழகத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக இருக்கிறது. தமிழை வாழ வைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் தமிழ் எவ்வாறு திட்டமிட்டு வீழ்த்தப்படுகிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தை சுட்டிக்காட்ட முடியாது.
 
தாய்மொழி வழிக்கல்வி தான் குழந்தைகளின் சிந்தனையை தூண்டும். தாய்மொழியில் அல்லாமல் பிறமொழியில் குழந்தைகளை பயிற்றுவிப்பது என்பது நீச்சல் தெரியாத குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்து மூச்சு திணற வைப்பதற்கு ஒப்பானதாகும் என்று ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ கூறியிருக்கிறது.
 
இதன் பிறகாவது தாய்மொழி வழிக்கல்வியின் அவசியத்தை உணர்ந்து, கர்நாடகத்தை பின்பற்றி தமிழ்நாட்டில் தாய்மொழி வழிக்கல்வி முறையை கொண்டுவர கல்வி பெறும் உரிமைச்சட்டத்தின் தேவையான திருத்தங்களை செய்து அதற்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை இம்முயற்சிக்கு ஏதேனும் முட்டுக்கட்டை போடப்படுமானால், ஒத்தக்கருத்துடைய முதலமைச்சர்களை ஒன்று திரட்டி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து, தாய்மொழி வழிக்கல்வியை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.