வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (08:22 IST)

நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்: விஜயகாந்த் கடிதம்

நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தின் விவரம்:-

“வட மாநிலங்களில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதிக மக்கள் உயிர் இழந்துள்ளதோடு, பெருவாரியான மக்கள் தங்கள் உடைமைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து வாடுகின்றனர்.

மறுபுறம் பல மாநிலங்களில் போதுமான மழையின்மையால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர்ப் பற்றாக்குறையும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு தேசிய நதிகள் இணைப்புத் திட்டம்தான் என்பது தாங்கள் அறிந்ததுதான்.

வாஜ்பாய் அவருடைய ஆட்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தி, பொதுமக்களின் போக்குவரத்தை மேம்படுத்தி, தொழில் துறையைச் சிறப்பாக்கினார்.

அது போல தங்களின் தலைமையில் உள்ள ஆட்சியில் நதி நீர் இணைப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுத்து வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தேமுதிக தங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரும்“ என்று விஜயகாந்த் குறிப்பிடட்டுள்ளார்.