1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (12:35 IST)

தேசிய பாலஸ்ரீ விருதுக்கான சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள்

கலைகளில் புதுமை படைத்திடும் சிறுவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பாலஸ்ரீ (National Bal Shree Honour) எனும் தேசிய விருது, குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்விருது மேடைக் கலை (Creative Performance), அறிவியற்கலை (Creative Innovative Science), படைப்புக் கலை  (Creative Art) மற்றும் எழுத்துக் கலை (Creative Writing) ஆகியவற்றில் புதுமைகள் படைத்திடும் கற்பனைத் திறமையுடைய 9 இலிருந்து 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு வழங்கப்படுகிறது. பாலஸ்ரீ
(National Bal Shree) விருதுத் தெரிவு உள்ளூர் அளவில், மண்டல அளவில் மற்றும் தேசிய அளவில் என மூன்று கட்டங்களாக நடைபெறும். 
 
சென்னை மாவட்ட அளவிலான பாலஸ்ரீ விருதுத் தெரிவுகள், சென்னை-28, இராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. 26.8.2014 அன்று காலை 9.30 மணி முதல் மேடைக் கலையிலும்  (Creative Performance), 27.8.2014 அன்று காலை 9.30 மணி முதல் படைப்புக் கலையிலும் (Creative Art), 28.8.2014 அன்று காலை 9.30 மணிமுதல் அறிவியல் கலையிலும் (Creative Innovative Science), மற்றும் எழுத்துக் கலையிலும்  (Creative Writing) போட்டிகள் நடைபெற உள்ளன. 
 
இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் 9 வயது 16 வயது வரையிலான மாணவ, மாணவியர்கள் தங்களது பிறப்புச் சான்று (Birth Certificate)  மற்றும் பள்ளியில் பயில்வதற்கான சான்றிதழ்  (School Bonafide Certificate) சமர்ப்பித்தல் வேண்டும். ( The nominee should be between the age group of 9+ to -16 years i.e. he/she shuld not be below 9 year or above 16 years as on 1st April 2014).
 
போட்டிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கருவிகளையும் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளே கொண்டு வர வேண்டும். உள்ளூர் அளவிலான இத்தேர்வில் தெரிவு செய்யப்படுவோர், அடுத்து நடைபெறவுள்ள மண்டல அளவிலான தெரிவில் சவகர் சிறுவர் மன்றச் செலவிலேயே கலந்து கொள்ளலாம். 
 
மேலும் விவரங்களை 044-2819 2152 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டு அறியலாம்.
 
இவ்வாறு தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.