வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 21 ஜூன் 2015 (16:55 IST)

நரேந்திர மோடி ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்கவில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

தேர்தலின் போது, நல்ல காலம் பிறக்குது என்று கூறி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, மக்களுக்கு நல்லதைச் செய்யவில்லை என்று ப.சிதம்பரம் குற்றம் சாற்றியுள்ளார்.
 
புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் பகுதியில் கோட்டூர், நற்சாந்துப்பட்டி, குலமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் ப.சிதம்பரம் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
 
அப்போது அவர் பேசுகையில், "தேர்தல் முடிந்து ஓராண்டு ஆகி விட்டது. மோடி பிரதமர் ஆனார். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு பாதகமாக அமைந்தாலும் நாங்கள் மலர்ந்த முகத்துடன் உங்களை காண வந்துள்ளோம்.
 
எப்போதும் போலவே வந்துள்ளோம். பேசுகிறோம். உங்களைச் சந்திக்கிறோம். உதவிகளைச் செய்கிறோம். தேர்தல் முடிவுகளால் நாங்கள் பாதிப்பு அடைவதில்லை. எங்களிடம் எந்த மாறுதலும் கிடையாது.
 
தேர்தலின் போது மோடி நல்ல காலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்று கூறி ஆட்சியைப் பிடித்தார். தற்போது ஓராண்டு உருண்டோடி விட்டது. நான் கேட்கிறேன். யாருக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. விவசாயிக்கு நல்ல காலம் பிறந்ததா? இளைஞர்களுக்கு நல்ல காலம் பிறந்ததா? பெண்களுக்கு நல்ல காலம் பிறந்ததா? கொள்முதல் விலையை உயர்த்தி தர விவசாயிகள் கேட்டனர்.
 
கரும்புக்கும், நெல்லுக்கும் ரூ.50 உயர்த்தினர். பருத்திக்கு ரூ.10 உயர்த்தி கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டை விட இவ்வாண்டு விவசாயச் செலவு டன்னுக்கு ரூ.50 தான் உயர்ந்து உள்ளதா? நல்ல காலம் பொறக்குது என்று உங்கள் ஊர் பகுதிகளில் குடுகுடுப்பைக்காரன் தான் செல்வான். அது போல மோடி கூறினார். ஆனால் நல்ல காலம் தான் எப்போது பிறக்கும் என்பது தெரியவில்லை.
 
விவசாய நிலங்களை விவசாயிகளின் அனுமதி பெற்ற பின்பே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் சட்டத்தையும் மீறி விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த சட்டம் போடுகின்றன.
 
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ரூ. 40 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.30க்கும் விற்க வேண்டும். ஆனால் விலையை குறைக்க மறுக்கின்றனர். இதனால் 30,000 கோடியை நாம் வரியாகச் செலுத்துகிறோம்.
 
கடந்த ஓராண்டில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்கள், எத்தனை பேருக்கு கல்விக்கடன் வழங்கினார்கள். எத்தனை தொழிற்சாலைகளை கொண்டு வந்தார்கள் என்று பாஜக ஆட்சி பட்டியலிட முடியுமா? இளைஞர்களின் நலன் கருதி திட்டம் தீட்டினார்களா? பெண்கள் நன்மை குறித்து திட்டம் தீட்டியுள்ளனரா? விதவை, முதியோர் என எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிட முடியுமா?
 
2014–2015 ஆம் ஆண்டில் 100 நாட்கள் வேலையை 40 நாட்களாக குறைத்து விட்டனர். 60 நாட்கள் வேலை கிடையாது. இதனால் ஒவ்வொரு விவசாயும் வருடத்தில் ரூ.7500 ஊதியத்தை இழந்து நிற்கின்றனர்.
 
இதனை கணக்கிட்டால் யாருக்கு நல்ல காலம் பிறக்குது என்பதை உணர முடியும். பொதுமக்களுக்கு நல்ல காலமா? அல்லது பிரதமர் மோடிக்கு நல்ல காலமா? என்பதை நீங்களே உணர முடியும்.
 
பிரதமருக்குத் தான் நல்ல காலம் என்பதில் ஐயம் கிடையாது. கடந்த ஓராண்டில் 21 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஒரு முறையாவது தமிழ் நாட்டிற்கு வந்தாரா? ஏன் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இன்னும் பிரதமர் செல்லவில்லை. ஆனால் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபராக விளங்குகிறார்.
 
புதிய எம்.பி.யான இந்த தொகுதி எம்.பி. இப்பகுதிக்கு நன்றி கூறக்கூட வரவில்லை என்பது இப்பகுதி மக்களாகிய நீங்களே கூறுகின்றீர்கள். நாடாளுமன்ற கூட்டம் நடந்தால் அங்கே சிவகங்கை குரல் ஒலிக்கும். ஆனால் தற்போது கூட்டம் நடைபெறுகிறது. சிவகங்கை குரல் ஒலிக்க மறுக்கிறது. ஏன் இந்த அவல நிலை இதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். 
 
நாட்டு மக்களுக்கு யார் பணிபுரிகின்றனர்? நாட்டுக்கு யார் சேவை செய்கின்றனர் என்பதை அறிந்து அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.