1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (16:53 IST)

பாபா என நினைத்து பிச்சைக்காரரிடம் ஆசி வாங்கிய பொதுமக்கள்

பாபா என நினைத்து பிச்சைக்காரரிடம் ஆசி வாங்கிய பொதுமக்கள்

தெருவில் பிச்சை எடுப்பவரை பாபா என்று நம்பி பொதுமக்கள் ஆசி வாங்கிய ருசிகர சம்பவம் குமாரபாளையத்தில் நடந்துள்ளது.


 

 
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் முருகேசன் என்பவர் ஒரு பாபா கோயிலை உருவாக்கி நிர்வகித்து வருகிறார். அந்த கோவிலுக்கு பக்தர் கூட்டம் ஒன்றும் பெரிதாக வரவில்லை. என்ன செய்வது என்று யோசித்த முருகேசனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
 
ஒரு முதியவரை அழைத்து வந்து பாபா வந்திருக்கிறார் என்று கூறினார். இதை அறிந்த பொதுமக்கள் அந்த கோவிலுக்கு ஓடி வந்தனர். அந்த முதியவரிடம் ஆசி பெற்றனர். சிலர் அவருக்கு உணவும் ஊட்டி விட்டனர். அவருக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர்.


 

 
இந்த விவகாரம் வெளியே தெரியவர பக்தர் கூட்டம் பெருகியது. தொலைக்காட்சி சேனல்களும் அங்கு சென்று பாபாவை படம் பிடித்தனர். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முருகேசன் “எனக்கு இதுவரை பாபா 4 முறை காட்சி கொடுத்திருக்கிறார். நான் விரைவில் ஒரு சித்தர் வடிவில் உன் கோவிலுக்கு வருவேன் என்று என்னிடம் கூறியிருந்தார். இன்று இவர் வந்துள்ளார். பாபாதான் இவர் வடிவில் வந்துள்ளார்” என்று அள்ளிவிட்டார்.
 
இந்நிலையில், அங்கு வந்த ஒருவர், இவர் பாபா இல்லை, குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே இவர் பிச்சை எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று கூற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கூட்டம் அங்கிருந்து கலைய தொடங்கியது.


 

 
சுதாரித்துக் கொண்ட முருகேசன் உடனடியாக அந்த பிச்சைக்காரரை வெளியே அனுப்பிவிட்டார். இப்போது வழக்கம்போல் அந்த முதியவர் குமாரபாளையம் பகுதியில் பிச்சை எடுத்திக் கொண்டிருக்கிறார்.
 
மக்களின் நம்பிக்கையை போலீ ஆசாமிகள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.