வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 19 ஜூலை 2014 (17:28 IST)

சுங்கச்சாவடியில் தகராறு செய்த வழக்கில் சீமான் கைது

சுங்கச்சாவடியில் தகராறு செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார்.
 
நாம் தமிழர் கட்சியின் சார்பில், கடந்த 17 ஆம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்ததும் இரவில் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார்களில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
 
இரவு 11 மணியளவில் அவர்களது வாகனங்கள், நத்தம் சுங்கச்சாவடிக்கு வந்தது. அப்போது சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக டோல்கேட் ஊழியர்களுக்கும், சீமான் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்து சீமானும், அவரது ஆதரவாளர்களும் சென்னை புறப்பட்டு வந்து விட்டனர்.
 
இந்த சம்பவம் குறித்து நத்தம் சுங்கச்சாவடி மேற்பார்வையாளர் அமீத்குமார், மேலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் அவர், ‘‘நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தகராறு செய்து, அத்துமீறி நடந்து கொண்டு ஊழியர்களை தாக்கியதாகக் கூறியிருந்தார். அதன்பேரில் மேலூர் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
 
இதையடுத்து சீமானிடம் விசாரணை நடத்த முடிவு செய்து மேலூர் டி.எஸ்.பி. மணிரத்தினம் தலைமையில் காவல்துறையினர் நேற்று காலை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகர், 26வது தெருவில் உள்ள சீமான் வீட்டுக்கு மதுரவாயல் காவல்துறையினரின் உதவியுடன் வந்தனர்.
 
அப்போது சீமான், வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்மொழியை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளை எதிர்த்தும், இந்தி மொழி திணிப்பை கண்டித்தும் பட்டினி போராட்டம் நடத்துவதற்காக தயாராகி கொண்டிருந்தார். காவல்துறையினர் சீமான் வீட்டுக்குள் சென்று, ‘‘உங்களை கைது செய்ய வந்துள்ளோம்’’ என்றனர்.
 
இதற்கிடையில் சீமானை கைது செய்ய காவல்துறையினர் வந்துள்ளனர் என்ற தகவல் அவரது கட்சியினர் இடையே காட்டுத்தீ போல் பரவியது. உடனடியாக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் சீமான் வீட்டின் முன்பு குவியத் தொடங்கினார்கள். இதனால் காவல்துறையினருக்கும், சீமான் ஆதரவாளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் எற்பட்டது.
 
பின்னர் சீமானை, மேலூர் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி மதுரைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.